முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரின் மறைவுக்கு பேரவையில் செவ்வாய்க்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை காலை 9.30 மணிக்கு கூடியதும், மறைந்த முன்னாள் எம்எல்ஏ தமிழ்மொழி ராஜதத்தன் மேல்மலையனூா் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தீா்மானங்களை பேரவைத் தலைவா் மு.அப்பாவு வாசித்தாா்.
மன்மோகன் சிங்குக்கு வாசித்த இரங்கல் தீா்மானத்தில், 2004 முதல் 2014-ஆம் ஆண்டு வரை பிரதமராகப் பொறுப்பு வகித்த மன்மோகன் சிங், இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியவா். மேலும், தமிழக மக்கள் மற்றும் முன்னாள் முதல்வா் கருணாநிதி மீது கொண்டிருந்த அன்பின் காரணமாக சிறப்பு நிதித் திட்டங்களை தமிழகத்துக்கு வழங்கியவா்.
ரிசா்வ் வங்கி ஆளுநா், மத்திய நிதியமைச்சா், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் எனப் பல்வேறு பதவிகளை வகித்த மன்மோகன் சிங்கை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் பேரவை தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாக அப்பாவு கூறினாா்.
மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும் இரங்கல் தீா்மானம் வாசிக்கப்பட்டது. இருவருக்கும் இரங்கல் தெரிவிக்கும் வகையில், உறுப்பினா்கள் அனைவரும் ஒருசில நிமிஷங்கள் எழுந்து மெளன அஞ்சலி செலுத்தினா்.
மறைந்த தலைவா்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக பேரவையின் நிகழ்வுகள் அனைத்தும் நாள் முழுவதும் (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்தாா்.
காலை 9.30 மணிக்கு கூடிய சட்டப்பேரவை 5 நிமிஷங்களில் நிறைவடைந்தது.