சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகள்: ஜன.13-ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

பொங்கல் விழாவையொட்டி ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை ஜன.13ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
முதல்வர் ஸ்டாலின்(கோப்புப்படம்)
முதல்வர் ஸ்டாலின்(கோப்புப்படம்)
Published on
Updated on
2 min read

பொங்கல் விழாவையொட்டி ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை ஜன.13ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னையில், தை மாதம் தொடக்கத்தில் பொங்கல் திருவிழாவின் போது ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ என்ற மாபெரும் கலைவிழா கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டின் கலை நிகழ்ச்சிகள் 13.1.2025 அன்று கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில் தமிழ்நாடு முதல்வரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த விழாவில் தமிழ்நாட்டின் புகழ் பெற்ற 250 கலைஞர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் இசை, நடன நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற உள்ளன.

தொடக்க விழாவை அடுத்து, ‘சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சிகள் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, ராஜா அண்ணாமலைபுரம், அரசு இசைக்கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர் திடல், கிண்டி கத்திபாரா சந்திப்பு, ஜாபர்கான்பேட்டை மாநகராட்சி விளையாட்டுத் திடல், தியாகராயநகர் நடேசன் பூங்கா, நுங்கம்பாக்கம் மாநகராட்சி விளையாட்டுத் திடல், எழும்பூர் அரசு அருங்காட்சியகம், கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ,வெ,ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத்திடல், ராயபுரம் ராபின்சன் பூங்கா, பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் கோபுரப் பூங்கா, கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா, கே.கே.நகர் சிவன் பூங்கா, வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், அம்பத்தூர் எஸ்.வி. விளையாட்டுத் திடல் ஆகிய 18 இடங்களில் 14.1.2025 முதல் 17.1.2025 வரை நான்கு நாட்கள் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெற உள்ளன.

‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவில்’ தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ள 1500 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம், துடும்பாட்டம், பம்பையாட்டம், கைசிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சேவையாட்டம், கோலாட்டம், ஜிக்காட்டம், ஜிம்பளா மேளம், பழங்குடியினர் நடனம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், வில்லுபாட்டு, கணியன் கூத்து, தெருக்கூத்து, பாவைக்கூத்து, தோல்பாவைக்கூத்து, நாடகம், கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட நாட்டுப்புற வடிவங்களை நிகழ்த்தி பார்வையாளர்களை பரவசப்படுத்துவார்கள். இத்துடன் புகழ்பெற்ற செவ்வியல் மற்றும் மெல்லிசை கலைஞர்களும் கலை நிகழ்ச்சிகள் வழங்க உள்ளனர். இவற்றுடன் கேரளாவின் தைய்யம் நடனம், மகாராஷ்டிராவின் லாவணி நடனம், ராஜஸ்தான் கூமர் நடனம், மேற்கு வங்காளம் தனுச்சி நடனம், கோவாவின் விளக்கு நடனம், உத்ராகண்ட்டின் சபேலி நடனம் ஆகிய அயல் மாநில கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியைத் தொடர்ந்து கோயமுத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய எட்டு நகரங்களிலும் இந்த ஆண்டு சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. விழா நடைபெறும் இடங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் விரும்பி உண்ணும் பல உணவு வகைகளைக் கொண்ட அரங்குகள் அமைத்து உணவுத்திருவிழாவும் நடத்தப்பட உள்ளது. பூம்புகார் நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாட்டின் புகழ் பெற்ற கைவினைப் பொருட்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் அரங்குகளும் அமைக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடி மகிழும் வாய்ப்புகளும் பார்வையாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகப்பேறு சிகிச்சையில் பெண் பலி! மது அருந்த சென்ற மருத்துவர் இழப்பீடு வழங்க உத்தரவு!

தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் நமது நாட்டுப்புறக் கலை வடிவங்களைப் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற நகரங்களில் வாழும் பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையிலும் சங்கமம் நம்ம ஊரு திருவிழாக்கள் தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் நடத்தப்ட உள்ளன. இந்த நிகழ்ச்சிகள் ஆயிரக்கணக்கான நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பயன்பெறவும், தமிழ் மண்ணின் வளமான கலை வடிவங்கள் உயிர்போடு திகழவும் உதவுகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.