தவெக தலைவர் விஜய் (கோப்புப் படம்)
தவெக தலைவர் விஜய் (கோப்புப் படம்)Instagram | Vijay

பரந்தூர் போராட்டக் குழுவினருடன் தவெக தலைவர் விஜய் நாளை சந்திப்பு!

பரந்தூர் போராட்டக் குழுவினரைச் சந்திப்பதற்கு தனியார் மண்டபம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்
Published on

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான போராட்டக் குழுவினரை நாளை (ஜன. 20) தவெக தலைவர் விஜய் சந்திக்கவுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 900 நாள்களாக போராட்டம் நடத்தி வரும் போராட்டக் குழுவினரை, தவெக தலைவர் விஜய் சந்திக்க அனுமதி மற்றும் பாதுகாப்புகோரி, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தமிழக காவல்துறை தலைமை இயக்குநர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் தவெக நிர்வாகிகள் மனு அளித்தனர். அவர்களின் மனுவை ஏற்று, அனுமதியும் வழங்கப்பட்டது.

இதற்கிடையே, பரந்தூர் மக்களை தவெக தலைவர் விஜய் சந்திப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்ததுடன், அதற்கான தகுந்த இடத்தையும் தவெக செயலர் புஸ்ஸி ஆனந்த் ஆய்வு செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில், திங்கள்கிழமை (ஜன. 20) பரந்தூர் மக்களை விஜய் சந்திப்பதற்கு தனியார் மண்டபம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், பரந்தூர் மக்களை திறந்தவெளி மைதானத்தில் சந்திக்கத்தான் தவெக தலைவர் விஜய் விரும்புவதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பரந்தூர் மக்களை விஜய் சந்திக்கும்போது, காஞ்சிபுரம் மாவட்ட தவெக நிர்வாகிகள் மட்டுமே உடனிருக்க வேண்டும், அனுமதிக்கப்பட்ட இடத்தில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டும்தான் நபர்கள் வரவேண்டும், அனுமதிக்கப்பட்ட வாகனங்களில் மட்டும் அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே வரவேண்டும் உள்ளிட்டவை நிபந்தனைகளாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும், இந்தச் சந்திப்பின்போது காஞ்சிபுர மாவட்ட தவெக நிர்வாகிகளைத்தவிர, மற்ற மாவட்ட நிர்வாகிகளோ ரசிகர்களோ வர மாட்டார்கள் என்று தவெகவினர் கூறினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. விமான நிலையத்துக்காக ஏகனாபுரம், தண்டலம், மகாதேவி, நாகப்பட்டு, நெல்வாய் உள்ளிட்ட கிராம மக்களின் வீடுகள் கையகப்படுத்தப்பட்டதுடன், 5,100 ஏக்கர்வரையில் விவசாய நிலங்களும் கையகப்படுத்தப்படவுள்ளன.

இந்த நிலையில், விவசாய நிலங்களைக் கையகப்படுத்தப்படுவதற்கு அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, ஏகனாபுரம் மக்கள் 900 நாள்களுக்குமேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான போராட்டக் குழுவினரை அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் சந்தித்து வந்தனர்.

இதற்கிடையே, கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தவெகவின் முதல் மாநாட்டில், பரந்தூர் விமான நிலையம் போராட்டக் குழுவினருக்கு ஆதரவாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில், விவசாய நிலங்களைப் பாதிக்கும் விமான நிலையத் திட்டங்கள் கூடாது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com