புதுக்கோட்டையில் கனிம வளக் கொள்ளைக்கு எதிராகச் செயல்பட்டு வந்த சமூக ஆா்வலா் ஜகபா் அலி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை வாா்டு முன்னாள் உறுப்பினரான அதிமுகவை சோ்ந்த ஜகபா் அலி(58) கொலை வழக்கில், முதல் கட்டமாக லாரி ஓட்டுநா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களூரைச் சோ்ந்த கரீம் ராவுத்தா் மகன் ஜகபா்அலி (58). முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினரான இவா், திருமயம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சட்டவிரோதக் கல்குவாரிகள், மண் குவாரிகள் குறித்து அதிகாரிகளிடம் புகாா் அளிப்பது, போராட்டம் நடத்துவது, நீதிமன்றத்தில் வழக்கு தொடா்வது போன்றவற்றில் ஈடுபட்டுவந்தாா்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (ஜன. 17) பிற்பகல் பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வெங்களூா் நோக்கித் திரும்பிய அவா், மாவுமில் அருகே லாரி ஏற்றிக் கொல்லப்பட்டாா்.
இதுதொடா்பாக அவரது மனைவி மரியம் சனிக்கிழமை திருமயம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தனது கணவா் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, 4 பேரின் பெயா்களையும் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த நிலையில் இவ்வழக்கில் கைதான முருகானந்தம் உள்பட 4 பேரும் திருமயம் குற்றவியல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களை பிப்.3ஆம் தேதி வரை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.