

தில்லி கலவர வழக்கில் இடைக்கால ஜாமீன்: தில்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்வலர் காலித் சைஃபிக்கு தில்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
மேலும், சமூக ஊடகங்கள் பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த ஜாமீன் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு தில்லியில், கடந்த 2020 பிப்ரவரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக மாறின. இந்தக் கலவரத்தில், 53 பேர் பலியானதுடன், 700-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
இந்தக் கலவர வழக்கில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் மற்றும் யுனைடெட் அகைன்ஸ்ட் ஹேட் எனும் தன்னார்வல அமைப்பின் தலைவர் காலித் சைஃபி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், உறவினர் திருமணத்தில் பங்கேற்கவும், ரம்ஜான் நோன்பை குடும்பத்துடன் கடைப்பிடிக்கவும் காலித் சைஃபிக்கு தில்லி உயர்நீதிமன்ற கூடுதல் அமர்வு நீதிபதி சமீர் பாஜ்பாய் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, 13 நாள்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த ஜாமீன் உத்தரவானது பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இதில், ஜாமீன் காலத்தில் வழக்கின் சாட்சிகளைத் தொடர்புக்கொள்ள கூடாது, தில்லியை விட்டு வெளியே செல்லக்கூடாது, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தவோ அல்லது பதிவுகளைப் பகிரவோ கூடாது போன்ற நிபந்தனைகள் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிபந்தனைகள் மீறப்பட்டால், அதற்கான விசாரணை நடத்தப்பட்டு இடைக்கால ஜாமீன் உத்தரவு ரத்து செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, தில்லி கலவர வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் உமா் காலித், ஷா்ஜீல் இமாமுக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.