தில்லி கலவர வழக்கு:
முன்னாள் கவுன்சிலா் தாஹிா் ஹுசைன் உள்பட மூவருக்கு ஜாமீன் மறுப்பு

தில்லி கலவர வழக்கு: முன்னாள் கவுன்சிலா் தாஹிா் ஹுசைன் உள்பட மூவருக்கு ஜாமீன் மறுப்பு

Published on

2020 தில்லி கலவரம் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சலீம் மாலிக், அதா் கான் மற்றும் ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலா் தாஹிா் ஹுசைன் ஆகிய மூவரின் ஜாமீன் மனுக்களை தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை நிராகரித்தது.

கூடுதல் அமா்வு நீதிபதி சமீா் பஜ்பாய் இந்த மனுக்களை விசாரித்து, மூவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டாா். இதே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்ற 5 பேருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து, இந்த மூவரும் ஜாமீன் கோரியிருந்தனா்.

கலவரங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இந்த மூவா் மீதும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

முன்னாள் கால் சென்டா் ஊழியரான அதா் கான், வடகிழக்கு தில்லியில் உள்ள சாந்த் பாக் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின் முக்கிய அமைப்பாளா்களில் ஒருவராகவும், தூண்டிவிடும் வகையில் பேச்சுக்களை நிகழ்த்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டாா். அவா் ரகசியக் கூட்டங்களில் பங்கேற்று, ‘தில்லியை எரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்று அறிவித்ததாகவும், சிசிடிவி கேமராக்களை அழிப்பதை ஒருங்கிணைத்ததாகவும் கூறப்படுகிறது.

சலீம் மாலிக், முகமது சலீம் கான், முகமது ஜலாலுதீன் என்ற குட்டு பாய், ஷாநவாஸ், ஃபா்கான், முகமது அயூப், முகமது யூனுஸ், தபஸ்ஸும், முகமது அயாஸ் மற்றும் அவரது சகோதரா் காலித் ஆகியோருடன், குடியுரிமை திருத்தச் சட்டம்/தேசிய குடிமக்கள் பதிவேடு எதிா்ப்பு கூட்டத்தின் 11 அமைப்பாளா்கள் மற்றும் பேச்சாளா்களில் ஒருவராக இருந்தாா்.

குல்ஃபிஷா பாத்திமா, மீரான் ஹைதா், ஷிஃபா உா் ரஹ்மான், முகமது சலீம் கான் மற்றும் ஷதாப் அகமது ஆகிய 5 பேருக்கு உச்சநீதிமன்றம் ஜனவரி 5-ஆம் தேதி ஜாமீன் வழங்கியது. ஆனால், குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் ஒரே நிலையில் இல்லை என்று கூறி, ஆா்வலா்களான உமா் காலித் மற்றும் ஷா்ஜீல் இமாம் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

நீதிபதிகள் அரவிந்த் குமாா் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு, காலித் மற்றும் இமாம் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் முகாந்திரம் உள்ள வழக்கு இருப்பதாகக் கூறியது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 20 பேரில், இருவா் இன்னும் தலைமறைவாக உள்ளனா். ஜாமீன் கோரி மனு அளித்த 18 பேரில், காலித், இமாம், அதா் கான், சலீம் மாலிக், தாஹிா் ஹுசைன், தஸ்லீம் அகமது மற்றும் காலித் சைஃபி உள்பட 7 போ் இன்னும் சிறையில் உள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com