
நமது நிருபர்
தமிழகத்தின் பரமக்குடி-ராமநாதபுரம் இடையே 46.7 கி.மீ. தூர தேசிய நெடுஞ்சாலை எண் 87-ஐ நான்கு வழிச் சாலையாக மாற்றும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.
அரசும், தனியாரும் இணைந்து நிதிப்பகிர்வு மேற்கொள்ள வகை செய்யும் ஹெச்ஏஎம் எனப்படும் ஹைபிரிட் அன்யுட்டி மாடல் அடிப்படையில் ரூ.1,853 கோடி மொத்த மூலதனத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இந்த மாடலின்படி இபிசி எனப்படும் பொறியியல், கொள்முதல், கட்டுமானம் மற்றும் பிஓடி எனப்படும் கட்டமைத்தல், இயக்குதல், பரிமாற்றம் ஆகிய பணிகளை அரசும் தனியாரும் கூட்டாக செயல்படுத்தும். அரசு நிதி வழங்குவதால் தனியார் எதிர்கொள்ளும் வணிக அபாயம் குறைகிறது. திட்டமும் விரைவாக முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தற்போது, மதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி இடையிலான இரு வழி தேசிய நெடுஞ்சாலை (என்.எச். 87) போக்குவரத்துக்கான பயன்பாட்டில் உள்ளது. இதனுடன் தொடர்புடைய மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் இந்த நான்கு வழிச் சாலை அமைக்கப்பட உள்ளது' என்றார்.
இத்திட்டம் பரமக்குடி, சத்திரக்குடி, அச்சுந்தன்வயல், ராமநாதபுரம் போன்ற விரைவான வளர்ச்சி கண்டுவரும் நகர்ப்புறங்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுவதுடன், இந்தப் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டு முக்கிய வழிபாட்டுத்தலங்களுக்கும் பொருளாதார மையங்களுக்கும் இடையிலான இணைப்பை வலுப்படுத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி இடையே சுற்றுலாவை மேம்படுத்தவும் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை மேம்பாட்டுக்கான புதிய வாய்ப்புகளுக்கும் இத்திட்டம் உதவும். 8.4 லட்சம் நேரடி மனித வேலை நாள்களையும் 10.45 லட்சம் மறைமுக மனித வேலை நாள்களையும் இது உருவாக்கும்.
தேசிய நெடுஞ்சாலை எண் 38, 85, 36, 536, மற்றும் 32 ஆகிய ஐந்து முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளையும், 3 மாநில நெடுஞ்சாலைகள் (எண் 47, 29, 34) ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, மாநிலத்தின் தென்பகுதி முழுவதும் ஒரு முக்கிய பொருளாதார, சமூக மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கான முனையங்களுக்கு தடையற்ற போக்குவரத்து இணைப்பை வழங்கும்.
கூடுதலாக, இந்த மேம்படுத்தப்பட்ட வழித்தடமானது மதுரை, ராமேசுவரம் ஆகிய முக்கிய ரயில் நிலையங்கள், மதுரை விமான நிலையம் மற்றும் பாம்பன், ராமேசுவரம் ஆகிய சிறிய துறைமுகங்கள் ஆகியவற்றுடன் இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் பல்முனை போக்குவரத்து ஒருங்கிணைப்பை உறுதி செய்யும். இந்தப் பகுதிகள் முழுவதும் சரக்கு மற்றும் பயணிகளின் விரைவான போக்குவரத்தை எளிதாக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
"தமிழகத்துக்கு நல்ல செய்தி' - பிரதமர் மோடி
நான்கு வழிச்சாலைத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதை "தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு ஒரு நல்ல செய்தி ' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், "தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு ஒரு நல்ல செய்தி! பரமக்குடி - ராமநாதபுரம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும். பொருளாதார வளர்ச்சியையும் சுற்றுலாவையும் அதிகரிக்கும்' எனத் தெரிவித்துள்ளார்.
The Union Cabinet has approved the extension of the four-lane National Highway from Madurai to Paramakudi up to Ramanathapuram.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.