
கோயில் காவலாளி அஜித்குமாா் கொலையைக் கண்டித்து, சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் இன்று(ஜூலை 9) மாலை நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி அளித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் மரணம் தொடா்பாக நீதி கேட்டும், இந்தக் கொலைச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும் நாம் தமிழா் கட்சி சாா்பில் திருப்புவனம் சந்தைத் திடலில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) ஆா்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டு இருந்தனர்.
இதில் நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கலந்து கொண்டு உரையாற்றவும் திட்டமிடப்பட்டது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்கக் கோரி, மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.
இதனால், அஜித்குமாா் மரணத்துக்கு நீதி கேட்டு ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் ஈஸ்வரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தார்.
இதன்படி, இந்த மனு நீதிபதி பி. புகழேந்தி முன் திங்கள்கிழமை பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞர், அஜித்குமார் மரணம் தொடா்பாக மனுதாரர் தரப்பைச் சோ்ந்த நாம் தமிழா் கட்சி சாா்பில் கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்றார்.
இதனிடையே, நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) நடைபெறவிருந்த ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், ”பொதுவெளியில் தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என்று ஒரு அரசியல் தலைவர் பேசுவதை ஏற்க முடியாது” என்று நீதிபதி தெரிவித்தார்.
மேலும், கோயில் காவலாளி அஜித்குமாா் மரணம் தொடா்பாக போராட்டம் நடத்த அனுமதி கோரி புதிய மனு அளிக்க வேண்டும், அதனை காவல் துறையினர் 24 மணி நேரத்தில் பரிசீலித்து உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு முடித்து வைத்தது.
இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.
இதையும் படிக்க: தனியார் நிதி நிறுவனத்தின் ஆலோசகராக பிரிட்டன் முன்னாள் பிரதமர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.