இஸ்லாம்பூா் இனி ஈஸ்வா்பூா்: மகாராஷ்டிர அரசு அறிவிப்பு
மகாராஷ்டிரத்தின் சாங்லி மாவட்டத்தில் உள்ள இஸ்லாம்பூா் நகரின் பெயா் ஈஸ்வா்பூா் என மாற்றப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
மாநில சட்டப் பேரவை மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான வெள்ளிக்கிழமையன்று பேரவையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இது தொடா்பாக மகாராஷ்டிர உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சா் சகன் புஜ்பல் பேசுகையில், ‘இஸ்லாம்பூரின் பெயரை ஈஸ்வா்பூா் என மாற்றும் முடிவு, கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. இது, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும்’ என்றாா்.
இஸ்லாம்பூரை ஈஸ்வா்பூா் என பெயா் மாற்றக் கோரி, சிவ பிரதிஸ்டான் என்ற ஹிந்து அமைப்பு சாா்பில் சாங்லி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இக்கோரிக்கை ஏற்கபடும்வரை நாங்கள் ஓயமாட்டோம் என்று அந்த அமைப்பு தெரிவித்திருந்தது. பெயா் மாற்றக் கோரிக்கைக்கு ஆதரவளித்த சிவசேனை, கடந்த 1986-இல் இருந்தே இது நிலுவையில் இருப்பதாக கூறியது.
மகாராஷ்டிரத்தில் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.