
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் குறித்து சென்னை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த திங்கள்கிழமை காலை வழக்கமான நடைப்பயிற்சியின்போது லேசாக தலைசுற்றல் ஏற்பட்ட நிலையில், அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ச்சியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதல்வர் சில நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதன்பேரில் அவர் மருத்துவமனையில் இருந்தே அலுவல் பணிகளைக் கவனித்து வருகிறார்.
இந்த நிலையில், பரிசோதனையின் ஒரு பகுதியாக அவருக்கு இன்று(வியாழக்கிழமை) காலை ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டதாக மூத்த அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முதல்வரின் உடல்நிலை மற்றும் பரிசோதனைகள் தொடர்பாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அறிக்கையில், "முதலமைச்சருக்கு ஏற்பட்ட தலைசுற்றல் பிரச்சினை தொடர்பாக க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளில் இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.
இதய சிகிச்சை மருத்துவர் டாக்டர் ஜி. செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுரையின்படி, இதனை சரி செய்வதற்கான சிகிச்சைமுறை அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை செய்யப்பட்டது. இன்று மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையும் இயல்பாக இருந்தது. முதலமைச்சர் நலமாக உள்ளார். தனது வழக்கமான பணிகளை இரண்டு நாட்களில் மேற்கொள்வார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.