
திமுக ஆட்சியின் ரிப்போர்ட் கார்டு ஒன்றை அதிமுக பொதுச் செயலரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி புதுக்கோட்டையில் இன்று வெளியிட்டார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பிரசாரப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்.
உருட்டுகளும் திருட்டுகளும் என்ற பெயரில் புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில், திமுக ஆட்சியை விமர்சிக்கும் வில்லுப்பாட்டு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி புதுக்கோட்டையில் காலையில் தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில், நான்கரை ஆண்டுகள் முடித்த திமுக ஆட்சி பற்றிய 'ரிப்போர்ட் கார்டு' என்ற பெயரில், ஒரு அறிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதில் வாக்காளர்கள் போட்ட மதிப்பெண்களையும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
தேர்தல் வாக்குறுதிகளாக திமுக சொன்னவற்றை செய்யவில்லை. இதற்கான 'வில்லுப்பாட்டு', 'சொன்னீங்களே செஞ்சீங்களா' என்ற விடியோ காட்சிகளுடன் வெளியிடப்பட்டுள்ளது.
திமுக கொடுத்த வாக்குறுதிகளைச் சொல்லி 'துரோக சக்கரம்' என்ற ஏமாற்றிய சக்கர வடிவம் ஒன்றையும் மேடையில் வைத்துக் காட்டினர்.
எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் இந்நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்களை விளக்கிப் பேசினார்.
நிகழ்ச்சியின் நிறைவாக, நான்கரை ஆண்டுகள் முடித்த திமுக ஆட்சி பற்றிய 'ரிப்போர்ட் கார்டு' வெளியிடப்பட்டது. வாக்காளர்கள் போட்ட மதிப்பெண்களையும் எடப்பாடி பழனிசாமி அதில் வெளியிட்டிருந்தார்.
புதுக்கோட்டையில் பிரசாரம்
அதிமுக பொதுச் செயலர், எடப்பாடி கே. பழனிசாமி, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசாரப் பயணத்தில், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மேற்கொண்டு வருகிறார்.
வெள்ளிக்கிழமை பகலில், முக்கியப் பிரமுகா்கள் சந்திப்பு நடைபெறுகிறது. தொடா்ந்து மாலை 4.30 மணிக்கு புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே பேசுகிறாா். கீழராஜவீதியில் சாலையில் மக்கள் சந்திப்பு (ரோடு ஷோ) முடித்துக் கொண்டு புறப்படும் அவா், விராலிமலை மற்றும் திருமயம் பகுதிகளில் பேசுகிறாா்.
நேற்றும் இன்றும் புதுக்கோட்டையில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதையொட்டி புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கா், தெற்கு மாவட்டச் செயலா் பி.கே. வைரமுத்து ஆகியோா் தலைமையில் அதிமுக நிா்வாகிகள் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.