
மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றத்தால் அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் நீரில் மூழ்கின.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணையில் உபரி நீர் கால்வாயில் வினாடிக்கு 82,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. சங்கிலி முனியப்பன் கோயில் அருகே உபரி நீர் மீண்டும் காவிரியில் கலக்கிறது. சங்கிலி முனியப்பன் கோவில் அருகே காவிரி கரையோரம் பயிரிடப்பட்டிருந்த பருத்தி, சோளம் உள்ளிட்ட பயிர்களும் தோட்டங்களில் இருந்த வாழை, தென்னை மரங்களும் நீரில் மூழ்கியுள்ளன. நீரில் மூழ்கிய பருத்திச் செடிகளில் இருந்து பருத்திகளை விவசாயிகள் சேகரித்து செல்கின்றனர்.
நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டால் இப்பகுதியில் மேலும் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கும். அதோடு மேட்டூர் எடப்பாடி சாலை போக்குவரத்து துண்டிக்கும் நிலை ஏற்படும். இப்பகுகுதிகளில் வருவாய் துறையினரும் தீயணைப்புப் படையினரும் காவல்துறையினரும் தீவிர கண்காணிப்பு ஈடுபட்டுள்ளனர். மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் நீர்வளத் துறை பணியாளர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
நீர் வரத்து அதிகரித்தாலோ குறைந்தாலோ அதற்கு ஏற்ப மதகுகளை உயர்த்தவும் மதகுகளை இறக்கவும் இப்பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் மழை தீவிரம் அடைந்தால் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளதால் காவிரி கரையோரம் முகாமிட்டிருந்த மீனவர்கள் மேடான பகுதிக்கு முகாமை மாற்றி உள்ளனர்.
பல இடங்களில் நீரின் விசை அதிகமாக இருந்த காரணத்தால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. நீரின் விசை குறைந்த பகுதிகளில் மீனவர்களின் வலைகளில் சொற்ப அளவிலேயே மீன்கள் பிடிபட்டுள்ளன. மீன்கள் கிடைக்காத காலங்களில் மீனவர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் என்று மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.