தில்லி மதராஸி குடியிருப்புகள்  அகற்றம்.
தில்லி மதராஸி குடியிருப்புகள் அகற்றம்.

தில்லி மதராஸி குடியிருப்பு இடிப்பு: தமிழகம் திரும்புவதற்கு அரசு நடவடிக்கை!

தில்லி மதராஸி குடியிருப்பு முகாம் அகற்றம் தொடர்பாக தமிழக அரசு.
Published on

தில்லி நிஜாமுதீன் மதராஸி முகாமில் தமிழர்களின் குடியிருப்புகள் இன்று(ஜூன் 1) முழுவதும் இடித்து அகற்றப்பட்ட நிலையில், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தாமதமின்றி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

”மதராசி கேம்ப்” என்பது தெற்கு தில்லி, நிஜாமுதீன் ரயில்வே நிலையத்துக்கு அருகிலுள்ள பராப்புல்லா ஜங்க்புரா வடிகாலின் கரையில் அமைந்துள்ள ஓரங்கட்டப்பட்ட குடிசை பகுதியாகும். இக்குடிசைப் பகுதியிலுள்ள 370 குடிசை வீடுகளில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

தில்லி உயர்நீதிமன்றம், “மதராசி கேம்ப்” என்பது பராப்புல்லா வடிகாலின் கரையில் கட்டப்பட்ட அனுமதியில்லாத கட்டடம்/ஆக்கிரமிப்பு எனக் குறிப்பிட்டுள்ளது. இதனால், வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு, சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பாக மழைக்காலத்தில் கடுமையான நீர் தேக்கம் ஏற்படுகிறது. 

எனவே, Delhi Urban Shelter Improvement Board (DUSIB) சட்டம் மற்றும் தில்லி சேரி மற்றும் ஜேஜே குடியிருப்பு இடமாற்றக் கொள்கை, 2015ன் கீழ் தகுதியான குடியிருப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இணங்க,  குடியிருப்பாளர்களின் மறுவாழ்வு மற்றும் இடமாற்ற தகுதியை மதிப்பீடு செய்ய ஒரு விரிவான கணக்கெடுப்பு, தகுதி தீர்மானக் குழுவினால் மேற்கொள்ளப்பட்டது. இந்த செயல்முறை அடிப்படையில், 370 குடியிருப்பாளர்களில் 215 பேர் தகுதியுடையவர்களாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகுதியுடைய பயனாளர்களுக்குத் தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் Delhi Urban Shelter Improvement Board (DUSIB) பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுக்கான (EWS) குடியிருப்பு யூனிட்டுகள், நரேலா, தில்லியில் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும், “மதராசி கேம்ப்” குடியிருப்பாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து சட்ட வழக்குகளும் தில்லி உயர்நீதிமன்றத்தால் 09.05.2025 தேதியிட்ட உத்தரவின் மூலம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அந்த உத்தரவின் படி, 01.06.2025 முதல் “மதராசி கேம்ப்” பகுதிகளில் இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. “மதராசி கேம்ப்” பகுதியில் அனுமதியில்லாத கட்டடங்களை இடிக்காமல் இருக்க குடியிருப்பாளர்களுக்கு இருந்த அனைத்து சட்ட வழிகளும் முழுமையாக முடிவடைந்துவிட்டன.

தமிழ்நாட்டின் முதலமைச்சரின் உத்தரவின்படி, புது தில்லியில் உள்ள “தமிழ்நாடு இல்ல” அலுவலகம், ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதிலும் கண்காணிப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. மாநிலத்துக்கு வெளியே வசிக்கும் தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, “மதராசி கேம்ப்” குடியிருப்பாளர்களுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தாமதமின்றி வழங்கப்படும் என்பதை உறுதி செய்கிறது.

முதல்வர் ஸ்டாலினின் வழிநடத்தலின் கீழ், “மதராசி கேம்ப்” குடியிருப்பாளர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவிக் கரம் நீட்டும். வாழ்வாதாரம் மற்றும் தேவையான பிற அடிப்படை உதவிகளும் வழங்கப்படும். இந்த உதவிகள், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் அலுவலகம் மூலம் சரியான நேரத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.

இதையும் படிக்க: தேமுதிகவுக்கு அடுத்தாண்டு மாநிலங்களவை சீட்: முன்னாள் அமைச்சர் கே. பி. முனுசாமி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com