
தனியாரின் நலனுக்காக புதிய இடத்தில் ரெகுலேட்டர் கட்டுவதைக் கைவிட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
மக்களின் கடந்த நான்காண்டு கால மக்கள் விரோத திமுக ஆட்சியால் பாதிக்கப்பட்டவர்கள், தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். எண்ணங்களுக்கு வடிகாலாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
திமுக ஸ்டாலின் மாடல் அரசு, நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஊராட்சி ஒன்றியம், உத்தமசோழபுரம் கிராமத்தில் வெட்டாற்றின் குறுக்கே கடல் மட்டத்தில் இருந்து மேற்கே 7.88 கி.மீ. தொலைவில் புதிய கடைமடை இயக்க அணை (ரெகுலேட்டர்) ஒன்றை சுமார் ரூ. 49.50 கோடி மதிப்பில் கட்டுவதற்கு 2.2.2025 அன்று அடிக்கல் நாட்டியது.
2019-ஆம் ஆண்டு எனது தலைமையிலான அம்மாவின் அரசில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு, சுமார் ரூ. 50 கோடி மதிப்பீட்டில் அதே உத்தமசோழபுரம் ஊராட்சியில் 3 கி.மீ. தாண்டி பூதங்குடி என்ற இடத்தில் புதிய கடைமடை இயக்க அணை – ரெகுலேட்டர் கட்ட திட்டமிடப்பட்டது. இங்கு ரெகுலேட்டர் கட்டுவதால், வளப்பாறு மற்றும் தேவநதி ஆகிய இரண்டு கிளை நதிகள் மற்றும் 28 சிறு வடிகால்கள் மற்றும் உத்தமசோழபுரம், நரிமணம், வடகரை, பூதங்குடி, பாலக்காடு, வடகுடி, பெருங்கடம்பனூர், கோகூர் உள்ளிட்ட 32 கிராமங்களில் உள்ள சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களும் பாதுகாக்கப்படுவதுடன், 32 கிராமங்களில் கடல் நீர் உட்புகுவது தடுக்கப்பட்டு நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும். கரோனா நோய்த் தொற்றின் காரணமாக அம்மாவின் அரசு திட்டமிட்டிருந்தபடி இங்கு ரெகுலேட்டர் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
2021-ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் இந்த திமுக ஸ்டாலின் மாடல் அரசு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒருசில திமுக நிர்வாகிகளின் சுயநலத்திற்காகவும், அங்குள்ள தனியார் இறால் பண்ணையாளர்கள் மற்றும் தனியார் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு சாதகமாக, அம்மா ஆட்சியில் போடப்பட்ட திட்டத்திற்குப் பதிலாக, புதிய இடத்தில் சுமார் ரூ. 49.50 கோடி மதிப்பில் ரெகுலேட்டர் அமைக்க நிர்வாகத் திறனற்ற திமுக அரசு 2.2.2025 அன்று அடிக்கல் நாட்டியுள்ளது.
ரெகுலேட்டர் அமையும் இடமாற்றத்தை அறிந்த 32 கிராம மக்களும் தங்களது கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்ததுடன், பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். மக்களின் கோரிக்கைகளுக்கு இந்த நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் மாடல் திமுக அரசின் செயல்பாட்டைக் கண்டித்து அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் சார்பிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், கடந்த மே 21-ல் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டதுடன், ஆளும் திமுக-வினரும், அதன் கூட்டணிக் கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சியினரும் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
மக்கள் நலனைப் புறக்கணித்துவிட்டு, தன் குடும்ப மக்களின் நலனில் மட்டுமே குறியாக இருக்கும் திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், உடனடியாக நாகப்பட்டினம் மாவட்டம், உத்தமசோழபுரம் கிராமத்தில், புதிய இடத்தில் ரெகுலேட்டர் கட்டுவதைக் கைவிட வேண்டும். நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரின் கோரிக்கையை ஏற்று, எங்களது ஆட்சியில் கட்ட திட்டமிடப்பட்ட இடத்தில் ரெகுலேட்டர் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இல்லாவிடில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: 35 புதிய கல்லூரிகள் திறந்தும் ஒரு ஆசிரியர்கூட நியமிக்கப்படவில்லை: அன்புமணி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.