35 புதிய கல்லூரிகள் திறந்தும் ஒரு ஆசிரியர்கூட நியமிக்கப்படவில்லை: அன்புமணி

கல்லூரிகளில் ஆசிரியர் நியமனம் குறித்து அன்புமணி ராமதாஸ் கண்டனம்.
பாமக தலைவர் அன்புமணி.
பாமக தலைவர் அன்புமணி. கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

35 புதிய கல்லூரிகள் திறந்தும் ஒரு ஆசிரியர்கூட புதிதாக நியமிக்கப்படவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாட்டில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை திறந்து வைத்திருக்கும் முதலமைச்சர்   மு.க.ஸ்டாலின், மேலும் 4 இடங்களில் புதிய கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மொத்தம் 35 புதிய கல்லூரிகளைத் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், அவற்றுக்கு ஒரே ஒரு புதிய பேராசிரியரைக் கூட திமுக அரசு தேர்ந்தெடுத்து நியமிக்காதது கண்டிக்கத்தக்கதாகும்.

2021&ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தலா 10 கல்லூரிகள் வீதம் இரு கட்டங்களாக 20 கல்லூரிகள் புதிதாக திறக்கப்பட்டன. அதன்பின் கடந்த மாதம் 26&ஆம் தேதி 11 புதிய அரசு கலை மற்றும்  அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்திருக்கிறார். கூடுதலாக மேலும் 4 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அடுத்த சில நாள்களில் திறக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இவற்றையும் சேர்த்து தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 179 ஆக உயரும். தமிழ்நாட்டில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஓர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கம். அந்த இலக்கை நோக்கி புதிய கலை & அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படுவது சரியானதே. ஆனால், கல்லூரிகளை மட்டும்  திறந்து விட்டு, அவற்றுக்கு ஆசிரியர்கள் உள்ளிட்ட எந்தக் கட்டமைப்பையும் ஏற்படுத்தாதது ஏமாற்று வேலையாகும்.

புதிதாக தொடங்கப்பட்ட ஒவ்வொரு கல்லூரியிலும் மொத்தம் 5 பாடப்பிரிவுகள் ஏற்படுத்தப்படும்; அவற்றில் ஒரு பாடப்பிரிவுக்கு 56 மாணவர்கள் வீதம் மொத்தம் 280 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு பாடம் கற்பிப்பதற்காக ஒவ்வொரு கல்லூரியிலும் தலா 12 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 35 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் 420 புதிய உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒரே ஒரு புதிய உதவிப் பேராசிரியர் கூட நியமிக்கப்படவில்லை. அண்மையில் புதிதாக திறக்கப்பட்ட கல்லூரிகளில் மட்டுமல்லாமல் இரு ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்ட கல்லூரிகளிலும் கூட புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. ஏற்கனவே செயல்பட்டு வரும் கல்லூரிகளில் பணியாற்றி வரும் உதவிப் பேராசிரியர்கள் தான் அயல்பணி முறையில் இந்தக் கல்லூரிகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.

புதிதாக தொடங்கப்பட்ட கல்லூரிகளுக்காக ஏற்கனவே செயல்பட்டு வரும் கல்லூரிகளில் பணியாற்றி வரும் உதவிப் பேராசிரியர்கள் அயல்பணியில் அனுப்பப்படுவதால், அந்தக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் சுமார் 10 ஆயிரத்து 500 பணியிடங்கள் உள்ள நிலையில், அவற்றில் 9000&க்கும் கூடுதலான பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளுமே கவுரவ விரிவுரையாளர்களை மட்டுமே நம்பியிருக்கின்றன. இத்தகைய சூழலில் அவற்றின் மாணவர்களுக்கு தரமான கல்வி எங்கிருந்து கிடைக்கும்?

அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் வகையில் 4000 புதிய உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நாள் முதல் திமுக அரசு  தொடர்ந்து கூறி வருகிறது. அதன் பின்னர் ஆயிரக்கணக்கான உதவிப் பேராசிரியர்கள் ஓய்வு பெற்று விட்ட நிலையில், காலியிடங்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைத் தாண்டி விட்டது. இவ்வளவுக்குப் பிறகும் புதிய ஆசிரியர்களை நியமிக்க அரசு முன்வரவில்லை என்றால் அவற்றை யாரும் காப்பாற்ற முடியாது.

மாணவர்களுக்கு  தரமான கல்வி வழங்க, சிறந்த பேராசிரியர்களை நியமிக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அந்தக் கடமையைக் கூட செய்யத் தவறி விட்ட திமுக அரசு, உயர்கல்வியை சீரழித்து வருகிறது. இளைஞர்களின் கல்வி வாய்ப்புகளை கெடுக்கும் திமுக அரசை, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களே சரியான நேரத்தில் வீழ்த்தி, பாடம் புகட்டுவார்கள். இது நடக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: மோடி அரசின் 11 ஆண்டுகள் = பொறுப்பின்மை + மாற்றமில்லை + வெறும் விளம்பரமே! ராகுல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com