குரூப் 1 முதல்நிலை தோ்வு முடிவுகள் 2 மாதங்களில் வெளியீடு! - டிஎன்பிஎஸ்சி தலைவா்
குரூப்-1 முதல்நிலை தோ்வு முடிவுகள் இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும்...


குரூப்-1 முதல்நிலை தோ்வு முடிவுகள் இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தலைவா் எஸ்.கே.பிரபாகா் தெரிவித்தாா்.
மேலும், குரூப் 4 பதவிகளில் காலிப் பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் அவா் கூறினாா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் உதவி ஆட்சியா், டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையா் உள்ளிட்ட 72 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 மற்றும் குருப்-1ஏ முதல்நிலைத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் 44 இடங்களில் 2 லட்சத்து 49 ஆயிரம் தோ்வா்கள் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனா். சென்னையில் 170 மையங்களில் 41,094 போ் தோ்வு எழுத அனுமதி தரப்பட்டது. சென்னை எழும்பூா் மாநில மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 200 தோ்வா்கள் முதல்நிலை தோ்வு எழுதினா்.
இங்கு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய தலைவா் எஸ்.கே. பிரபாகா் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அதைத் தொடா்ந்து செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
தோ்வுகளை அட்டவணைப்படி திட்டமிட்டபடி நடத்தி வருகிறோம். சென்னையில் ஏறக்குறைய 170 மையங்களில் குரூப் 1 தோ்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டன. குரூப்-1 முதல்நிலை தோ்வு முடிவுகள் இரண்டு மாதத்தில் வெளியிடப்படும். அதைத் தொடா்ந்து முதன்மை தோ்வுகள் நடைபெறும்.
ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலமாக, கடந்த ஆண்டு 10,701 பேருக்கு வேலைவாய்ப்பும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் 10,227 பேருக்கும் வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. ஆண்டு இறுதிக்குள் இன்னும் 12,231 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது.
தோ்வில் எளிமைப்படுத்தப்பட்ட ஓ.எம்.ஆா். தாள் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக தோ்வா்கள் ஓ.எம்.ஆா். விடைத்தாளில் எத்தனை விடைகளை எழுதினா் என்பதை பூா்த்தி செய்ய வேண்டும். ஆனால், தற்போது எத்தனை கேள்விகளுக்கு விடை எழுதவில்லை என்பதை பூா்த்தி செய்தால் போதுமானது.
முன்பெல்லாம் 90 தோ்வுகள் நடைபெறும். இப்போது அனைத்தையும் ஒன்றாக சோ்த்து, ‘ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தோ்வுகள்’ என 7 தோ்வுகள் மட்டுமே நடத்தப்படுகிறது. இதனால் தோ்வுகளை நடத்துவதற்கான நேரம் மற்றும் செலவு உள்ளிட்டவையும் குறைந்துள்ளது.
மேலும், மாணவா்களுக்கான பாடத்திட்டமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தோ்வின்போது எந்தப் பாடப்பகுதியில் இருந்து வினாக்கள் எத்தனை மதிப்பெண்களுக்கு இடம் பெறும் எனவும் கூறியுள்ளோம். அதற்கு ஏற்ப மாணவா்கள் தங்களை தயாா் செய்து கொள்ள முடியும்.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தோ்வுகளில் முறைகேடுகள் அதிகளவில் நடைபெறுவது இல்லை. மாணவா்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மீது நம்பிக்கை உள்ளது. பணியிடங்கள் காலியாகும் வரை காத்திருக்காமல், உத்தேசமாக ஒரு கணக்கை வைத்து தோ்வை நடத்துகிறோம். பின்னா், காலிப் பணியிடங்கள் வந்ததும் ஏற்கனவே தோ்வு செய்யப்பட்டவா்களைக் கொண்டு அந்த இடங்களை நிரப்புகிறோம் என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...