
தேசிய சட்டப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற திருச்சியைச் சேர்ந்த மாணவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பேனாவைப் பரிசாக அளித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக விமானம் மூலம் நேற்று திருச்சி வருகை தந்தார். கல்லணையில் இருந்து டெல்டா பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார்.
தொடர்ந்து தஞ்சையில் நடைபெற்ற பல்வேறு விழாக்களில் கலந்து கொண்டார். மீண்டும் சென்னை செல்வதற்காக திருச்சி வருகை தந்த அவர், மிளகு பாறை ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் பயின்று கிளாட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி ராகிணியைச் சந்தித்து சால்வை அணிவித்து தனது பேனாவை பரிசாக அளித்தார். மேலும் மாணவியிடம் நன்றாக படிக்க வேண்டும் என்று கூறி வாழ்த்துத் தெரிவித்தார்.
இதுகுறித்து மாணவி கூறும்போது, நான் முதல்வன் திட்டம் மூலமாக பயிற்சி பெற்று இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளதாகவும் இதற்கு உறுதுணையாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். மேலும் முதல்வர் நேரில் வாழ்த்து தெரிவித்தது மகிழ்ச்சியாக இருந்ததாகத் தெரிவித்தார்.
இதுபற்றி முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
"தஞ்சையிலிருந்து திருச்சி செல்லும் வழியில், அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் பயின்று, கிளாட் தேர்வில் தேர்ச்சி பெற்று, சட்டம் பயிலச் செல்லும் மாணவி ராகிணியைச் சந்தித்து வாழ்த்தினேன்!
சாதனைகள் பல படைத்திடும் நமது அரசின் திட்டங்களுக்குக் கையெழுத்திட்ட எனது பேனாவை, சாதனைகள் பல படைத்திட வேண்டும் என வாழ்த்தி ராகிணிக்குப் பரிசளித்தேன்!" என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.