போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

மண்வெட்டியால் மகளை அடித்துக்கொன்ற தந்தை!! நெல்லையில் பரபரப்பு!

நெல்லையில் மண்வெட்டி கணையால் மகளை அடித்துக்கொன்ற தந்தை.

News image
கொலை நடந்த ஜெயலட்சுமியின் வீடு.
Updated On :18 ஜூன் 2025, 9:59 am

DIN

சரியாக கவனிக்காததாக கூறி மண்வெட்டி கணையால் மகளை அடித்துக்கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மேலகருங்குளம் சிவாஜிநகர் விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவர் கட்டட தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி (வயது 50). இவரது பராமரிப்பில் அவரது தந்தை வேல் (78) இருந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று(ஜூன் 17) காலையில் காளிமுத்து வேலைக்கு சென்று விட்டார். மாலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்து பார்த்தபோது அங்கு ஜெயலட்சுமி முகம் மற்றும் பின்புற தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீஸார் அங்கு விரைந்து வந்து பார்த்தபோது ஜெயலட்சுமி கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவரை கொலை செய்தது யார்? என்பது குறித்து போலீஸார் விசாரித்தனர். எப்போதும் வீட்டிலேயே இருக்கும் ஜெயலட்சுமியின் தந்தை வேல் மாயமாகி இருந்ததால், அவர் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் அவரைத் தேடினர். அவரை இரவில் போலீஸார் பிடித்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

ஜெயலட்சுமியின் மகன் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இதனால் ஜெயலட்சுமி தனது தந்தையை வீட்டில் வைத்து கவனித்து வந்துள்ளார். தந்தை-மகளுக்கு இடையே அவ்வப்போது தகராறு நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கு சமீபத்தில் கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் வயது முதிர்ச்சியால் அவருக்கு பல்வேறு உடல் நல பிரச்னைகள் இருந்தபோதிலும் ஜெயலட்சுமி முகம் கோணாமல் கவனித்து வந்துள்ளார்.

எனினும் தன்னை சரியாக கவனிக்கவில்லை என்றுகூறி அடிக்கடி அவர் தனது மகளுடன் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று வேலுவுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு ஜெயலட்சுமி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது உணவை சாப்பிட்டுவிட்டு அமர்ந்திருந்த வேல் திடீரென வீட்டுக்குள் சென்று, மகள் என்றும் பாராமல் மண் வெட்டி கணையால் தனது மகளை சரமாரியாக அடித்துக்கொலை செய்துவிட்டு மேலப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு நடக்க முடியாமல் நடந்து சென்றுள்ளார்.

ஒருகட்டத்தில் அவரால் மேற்கொண்டு நடக்க முடியாததால், போலீஸ் நிலையத்திற்கு மேல் பகுதியில் மரத்தடி நிழலில் இருந்துள்ளார் என்ற விபரம் தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகளையே தந்தை கொலை செய்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.