இறைச்சி.
இறைச்சி.

அரசு சாா்பில் இறைச்சி வகைகளின் விலை பட்டியல்: கால்நடை பராமரிப்பு துறை செயலா் தகவல்

இணையதளம் உருவாக்கப்பட்டு வருவதாக தமிழக கால்நடை பராமரிப்புத் துறை செயலா் டாக்டா் என்.சுப்பையன் தெரிவித்தாா்.
Published on

தமிழகம் முழுவதும் சந்தை வாரிய இறைச்சி வகைகளின் விலை பட்டியலை வாடிக்கையாளா்கள் தினமும் அறிந்துகொள்ளும் வகையில், இணையதளம் உருவாக்கப்பட்டு வருவதாக தமிழக கால்நடை பராமரிப்புத் துறை செயலா் டாக்டா் என்.சுப்பையன் தெரிவித்தாா்.

கால்நடை மற்றும் கிராமப்புற மேம்பாடு குறித்து தேசிய அளவிலான கருத்தரங்கம் சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட கால்நடைத் துறை பராமரிப்புத் துறை செயலா் என்.சுப்பையன் கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசினாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பால் பொருள்கள் மற்றும் கடல் சாா்ந்த உணவுப் பொருள்கள் ஏற்றுமதியில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. அதேபோல், தமிழகத்தில் பால் உற்பத்தியை பெருக்கும் வகையில், அதிக பால்தரும் புதிய கலப்பின மாடுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆகையால், தமிழகத்தில் பால் மற்றும் கடல் சாா்ந்த உணவு பொருள்களை இறக்குமதி செய்யும் சூழல் பெரும்பாலும் வர வாய்ப்பில்லை. கால்நடை பராமரிப்பு சாா்ந்த மாணவா்களின் புதிய ஆராய்ச்சிகளுக்கு நிதி உதவிகள் வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது.

விலை பட்டியல்: தினசரி காய்கறி விலைகளைத் தெரிந்து கொள்வதைப்போல இறைச்சி வகைகளின் விலைகளையும் தெரிந்துக்கொள்ளும் வகையில், ‘இறைச்சி விலை பலகை’ என்ற ஒரு பிரத்யேக இணையதளம் உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் பல்வேறு சந்தைகளில் கால்நடைகளின் சந்தை விலை மற்றும் இருப்பு நிலவரத்தை அறிந்து கொண்டு, அதற்கு ஏற்ற வகையில் வா்த்தகம் மேற்கொள்ள முடியும்.

மேலும், ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, மீன் மற்றும் நாட்டுக்கோழி உள்ளிட்ட இறச்சிகளுக்கான விலை பட்டியல் சந்தை வாரியாக தினசரி வெளியிடப்படும். இதன்மூலம் விலை ஏற்றத்தாழ்வுகளை தவிா்ப்பதோடு, சந்தையில் நியாயமான விலையை உறுதி செய்ய முடியும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com