பெண்களின் பாதுகாப்புக்கு சென்னையில் ஆட்டோ, கார்களில் 'காவல் உதவி க்யூஆர் குறியீடு'

பாதுகாப்பான பயணத்திற்கு ஆட்டோ, வாடகை கார்களுக்கு 'காவல் உதவி க்யூஆர் குறியீடு'களை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
பெண்களின் பாதுகாப்புக்கு சென்னையில் ஆட்டோ, கார்களில் 'காவல் உதவி க்யூஆர் குறியீடு'
Published on
Updated on
2 min read

மக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்திட ஆட்டோ மற்றும் வாடகை கார்களுக்கு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் 'காவல் உதவி க்யூஆர் குறியீடு'களை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(மார்ச் 7) வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (7.3.2025) தலைமைச் செயலகத்தில், சென்னை பெருநகர காவல்துறையின் முன்முயற்சியாக, சென்னை மாநகரில் பொதுமக்கள் ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் வாடகை கார்களில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் வகையில் காவல் உதவி க்யூஆர் குறியீடுகளை வழங்கிடும் விதமாக ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்களிடம் க்யூஆர் குறியீடுகளை வழங்கினார்.

சென்னை மாநகருக்குள் பயணிகள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும், சென்னை பெருநகர காவல்துறை, ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் வாடகை கார்களுக்கு க்யூஆர் குறியீடு அடிப்படையிலான அவசர கால பதில் அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சி, நிகழ்நேர கண்காணிப்பு, அவசர கால பதில் வழிமுறைகள் மற்றும் ஏற்கனவே உள்ள வாகன வழித்தளங்களுடன் தடையற்ற ஒருங்கிணைப்பை வழங்க, இந்த தொழில்நுட்பம் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை பயன்படுத்துகிறது.

சென்னை மாநகரில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்கள் / மாநகராட்சிகளில் இருந்து வரும் வாகனங்கள் உட்பட 89,641 ஆட்டோ ரிக்ஷாக்கள் இயங்குகின்றன. இவற்றில், 78,000 ஆட்டோ ரிக்ஷாக்கள் ஊபர், ரேபிடோ மற்றும் ஓலா போன்ற வாகன சேவைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

பயணிகள் மற்றும் ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில், சென்னை பெருநகர காவல்துறை முதல் கட்டமாக, ஒவ்வொரு ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களுக்கும் 88,859 தனிப்பயனாக்கப்பட்ட (Customized) மற்றும் பிரத்யேக தனித்துவமான க்யூஆர் குறியீட்டை உருவாக்கியுள்ளது. இந்த க்யூஆர் குறியீடு ஆட்டோ ரிக்ஷா / வாடகை கார்களின் ஓட்டுநர் இருக்கைக்குப் பின்னால் ஒட்டப்படும். இதை பயணிகள் எளிதாக ஸ்கேன் செய்துகொள்ளலாம்.

அவசரநிலை ஏற்பட்டால், எஸ்ஓஎஸ் பட்டனை அழுத்தினால், சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்படும், இது ஆட்டோரிக்ஷாவின் சரியான இடம் மற்றும் அதன் விவரங்கள், உரிமையாளரின் விவரங்கள் போன்றவை கட்டுப்பாட்டு அறைக்கு தெரியவரும். கூடுதலாக, பயணிகள் 112 என்ற அவசர கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு அழைத்து உடனடி உதவியை உறுதிசெய்யும் வசதியும் இதில் உள்ளது.

இப்புதிய க்யூஆர் குறியீட்டின் முக்கிய நன்மை என்னவென்றால், எஸ்ஓஎஸ் எச்சரிக்கை அழுத்தும்போது, பயணிகளின் சரியான இடம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாகத் தெரியவருவதால், குறிப்பாக இரவு நேரங்கள் அல்லது தனி சவாரிகளின்போது காவல்துறையினரின் ரோந்து வாகனங்களின் மூலம் துல்லியமாக சம்பவ இடத்திற்கு சென்று உதவியை அணுகும் வசதியும் உள்ளது.

மேலும், சென்னை பெருநகர காவல் துறை, ரேபிடோ, ஓலா மற்றும் உபர் போன்றவற்றுடன் இணைந்து, தங்கள் அவசர எச்சரிக்கைகளை சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டு அறையுடன் ஒருங்கிணைக்கிறது. இந்த வாகனங்களில் பயணம் செய்பவர்களின் பயன்பாடுகள் மூலம் செய்யப்படும் எந்தவொரு எஸ்ஓஎஸ் அழைப்பும் சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேரடியாக அனுப்பப்படும், இதனால் காவல்துறை அதிகாரிகள் பயணிகளின் வேண்டுகோளின் பேரில் பயணத்தின் நிகழ்நேரத்தை கண்காணிக்க முடியும். அவசரநிலை ஏற்பட்டால், போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை காவலர்களால் வாகனத்தின் நிகழ்நேரத்தை கண்காணித்து, அதற்கேற்ப ரோந்து வாகனங்களின் மூலம் உதவிட முடியும்.

பெண்கள், குழந்தைகள் மற்றும் பெருநகரத்திற்கு பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான பயணத்தை இப்புதிய க்யூஆர் குறியீடு உறுதி செய்கிறது. இதன்மூலம், சென்னை முழுவதும் ஒரு விரிவான பாதுகாப்பு வலையமைப்பு உருவாக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் முனைவர்
க. பொன்முடி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ. அருண், இ.கா.ப., கூடுதல் ஆணையர் (போக்குவரத்து) ஆர். சுதாகர், இ.கா.ப., மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com