
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் எவ்வித ஆட்சேபனை இல்லை என தமிழக அரசு தெரிவிக்காவிட்டால் கர்நாடகத்தில் தமிழ் திரைப்படங்கள் ஓடாது என வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
கர்நாடகம் - மகாராஷ்டிரம் மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து சேவையில் ஏற்ப்பட்ட தகராறு மார்ச் 22ம் தேதி மாநிலம் தழுவிய பந்த் போராட்டம் நடைப்பெறுவதாக கன்னட அமைப்புக்கள் அறிவித்துள்ள நிலையில் கன்னட சலுவளி வாட்டள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்புகளைச் சேர்ந்த 100க்கும் மேற்ப்பட்டோர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த தமிழக - கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு, தமிழகம் நுழைய முயன்றவர்கள் ஆனேக்கல் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த வாட்டாள் நாகராஜ்: மகாராஷ்டிரம் மாநிலத்தை மட்டுமல்ல தமிழக அரசைக் கண்டித்தும் நாங்கள் பந்தில் ஈடுபட உள்ளோம்.
மேக்கேதாட்டு அணைக்கட்ட எவ்வித ஆட்சேபனை இல்லை என ஒரு மாதத்திற்குள்ளாக தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். ஸ்டாலின் மட்டுமல்ல, தமிழக தலைவர்கள் அனைவரும் மேக்கேதாட்டு திட்டத்துக்கு எதிராக இருக்கிறார்கள்.
ஒரு மாதத்திற்குள் தெரிவிக்காவிட்டால் முதல் போராட்டமாக கர்நாடக மாநிலத்தில் தமிழ் சினிமாக்கள் ஓட விட மாட்டோம்.
மும்மொழி கல்விக்கொள்கைக்கு எதிராக தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய "கூட்டு நடவடிக்கைக் குழு" என்பதை நாங்கள் கண்டிக்கிறோம்.
தொகுதி மறுசீரமைப்பில் எந்த தொகுதிகளின் எண்ணிக்கையும் குறையாது அப்படி குறைந்தால் மத்திய அரசிற்கு எதிராக நாங்களும் போராடுவோம்.
தமிழகத்தில் நடக்கும் இந்தி போராட்டத்தை விட, கர்நாடக மாநிலத்தில் இந்தி மொழிக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வருகிறோம். இந்தி மொழியை அனுமதிக்க மாட்டோம்.
காவிரி நீர் தமிழக அரசு கடலில் கலப்பதை தடுக்கவே நாங்கள் மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டுகிறோம்.
காவிரி, மேக்கேதாட்டு, மாதாயி உள்ளிட்ட அணைகளுக்காக தமிழக, மகாராஷ்டிர மாநிலங்களைக் கண்டித்து மாநிலத் தழுவிய பந்த் நடக்கும் என்றார்.