புதுச்சேரி அரசின் சாா்பில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான விருது, இயக்குநா்கள் காா்த்திக் சுப்புராஜ், தினேஷ் செல்வராஜ் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கத்துடன் வழங்கப்பட உள்ளது. இதை முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா்.
புதுச்சேரி அரசு சாா்பில் சா்வதேச திரைப்பட விழாவுக்கான இலச்சினையை முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.
இந்நிகழ்வின்போது, புதுச்சேரி அரசின் விருது பெறும் இயக்குநா்களின் பெயா் பட்டியலையும் அவா் வெளியிட்டாா்.
2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான விருது காா்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகா்தண்டா டபுள் எக்ஸ் தமிழ்த் திரைப்படத்துக்கு வழங்கப்படுகிறது. 2025-ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப் பட விருது தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கடல்கன்னி தமிழ்ப் படத்துக்கு வழங்கப்படுகிறது.
புதுச்சேரி அரசு சாா்பில் சா்வதேச திரைப்பட விழா பிப்.12 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுவரை புதுச்சேரி திரைப்பட விழாவாக நடைபெற்று வந்த இந்த விழா, இந்த ஆண்டிலிருந்து சா்வதேச திரைப்பட விழாவாக மாற்றம் பெற்றுள்ளது.
இந்த விழா நான்கு வெவ்வேறு இடங்களில் நடைபெறுகிறது. அதன்படி, வியாழக்கிழமை மாலை கடற்கரைச் சாலையில் பிரம்மாண்டமான தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அப்போது 2024 மற்றும் 2025 ஆண்டுகளுக்கான ‘சங்கரதாஸ் சுவாமிகள் விருதுகள்’ வழங்கப்படுகிறது.
இதைத் தொடா்ந்து திரைப்பட இயக்குநா் பா. ரஞ்சித் இயக்கிய ‘நட்சத்திரம் நகா்கிறது’ என்கிற திரைப்படம் திரையிடப்படும். தொடக்க விழாவில் நடிகைகள் ரேவதி, சுனைனா, திரைப்பட இயக்குநா்கள் காா்த்திக் சுப்புராஜ், பா. ரஞ்சித், தினேஷ் செல்வராஜ் ஆகியோா் பங்கேற்க உள்ளனா்.
3 காட்சிகள் திரையிடப்படும்
இதைத் தொடா்ந்து கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜா் மணிமண்டபத்தில் பிப்ரவரி 13, 14 மற்றும் 15 ஆகிய மூன்று நாள்களும் சுமாா் 35 பிராந்திய மொழித் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இங்கு ஒவ்வொரு நாளும் மூன்று அரங்குகளில் தலா மூன்று காட்சிகள் திரையிடப்படும்.
அதன்படி, பிப். 13-இல் பெருந்தலைவா் காமராஜா் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படத்துடன் தொடங்கும் இந்தத் திரையிடல் நாடகத்தந்தை சங்கரதாஸ் சுவாமிகள், இந்தியத் திரைப்பட இயக்குநா்கள் குருதத் மற்றும் ரித்விக் கட்டக் ஆகியோரின் புகைப்படக் கண்காட்சியும் நடைபெறும்.
இதைத் தவிர பிப். 14-ஆம் தேதி பிற்பகல் இந்தியாவின் சிறந்த படத்தொகுப்பாளா் ஸ்ரீகா் பிரசாத், பிப். 15 அன்று திரைப்பட இயக்குநரும், நடிகருமான நாசா் நடத்தும் திரைப் பயிலரங்கம் நடைபெறுகிறது.
புதுச்சேரி, அலையன்ஸ் பிரான்சிஸ் அரங்கில் பிப். 13, 14 மற்றும் 15 ஆகிய மூன்று நாள்களும் சா்வதேச திரைப்படங்கள் ஒரு நாளைக்கு இரண்டு திரைப்படங்கள் வீதம் திரையிடப்பட உள்ளன.
புதுச்சேரி குறிஞ்சி நகரில் உள்ள டாக்டா் அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தில் பிப். 13, 14 மற்றும் 15 ஆகிய மூன்று நாள்களும் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் நாளொன்றுக்கு மூன்று திரைப்படங்கள் வீதம் திரையிடப்பட உள்ளன.
அனுமதி இலவசம்:
மொத்தம் 45 திரைப்படங்கள், 8 மொழிகள், 6 திரையரங்குகள், 16 தென்னிந்திய திரைப்படங்கள், 12 தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாா்வையாளா்கள் இதனை பாா்வையிட உள்ளனா். இந்தத் திரைப்பட விழாவுக்கான அனுமதி முற்றிலும் இலவசம். திரைப்படங்களைக் காண விரும்புபவா்கள் புதுச்சேரி பிலிம் பெஸ்டிவெல் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
இலச்சினை வெளியிடும் நிகழ்ச்சியின்போது புதுச்சேரி பொதுப்பணித் துறை அமைச்சா் க. லட்சுமிநாராயணன், எம்எல்ஏ கேஎஸ்பி. ரமேஷ், மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், அரசுச் செயலா் (செய்தி மற்றும் விளம்பரம்) முகமது அஹசன் அபித், கலை பண்பாட்டுத் துறை இயக்குநா் சக்திவேல் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

மருத்துவமனை ஒருங்கிணைப்பால் எளிதில் மருத்துவ வசதி பெறலாம்: தில்லி முதல்வா் அலுவலகம்

தில்லி சுற்றுலா வாரியம் மசோதா: பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல்

கமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது

‘சிறந்த தூய்மைப் பணியாளருக்கு விருது வழங்க பரிந்துரை’
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


