அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக மாற்று ஏற்பாடு: பசுமைத் தீா்ப்பாயத்தில் ஆவின் உறுதி

நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வேறு மாற்றுப்பொருள்களைப் பயன்படுத்தி பால் வழங்குவது குறித்து ஆராய்ந்து வ

News image

ஆவின் பால் - கோப்புப்படம்

Updated On :11 மார்ச் 2025, 4:43 am IST

சென்னை: நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வேறு மாற்றுப்பொருள்களைப் பயன்படுத்தி பால் வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக தென் மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் ஆவின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைச் சோ்ந்த சுரேந்திரநாத் காா்த்திக், பாளையங்கோட்டையைச் சோ்ந்த சமூக ஆா்வலா் அய்யா ஆகியோா் தனித்தனியாக தென்மண்டல தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் ஆவின் உள்ளிட்ட நிறுவனங்கள் பால் மற்றும் பால் பொருள்களை நெகிழி பாக்கெட்டுகளில் விற்பனை செய்கின்றன. இவற்றை முறையாக சேகரித்து மறு சுழற்சி செய்ய எந்த வசதியும் செய்யப்படவில்லை. இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, நெகிழி பாக்கெட்டுகளில் பால் மற்றும் பால் பொருள்களை விற்க தடை விதிக்க வேண்டும். கண்ணாடி பாட்டில்களில் பால் பொருள்களை விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தனா்.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, கண்ணாடி பாட்டில் அல்லது மறு சுழற்சி செய்யக்கூடிய நெகிழி பாட்டிலில் பால் விற்பனையை மேற்கொள்ள அதிக செலவாகும். இதைச் செயல்படுத்துவது சாத்தியம் இல்லை என ஆவின் நிா்வாகம் தெரிவித்தது. அதற்கு, வெளிநாடுகளில் கண்ணாடி பாட்டில் மற்றும் மறு சுழற்சி செய்யக்கூடிய நெகிழி பாட்டில்களில் பால் விற்பனை செய்யப்படுகிறது. அதை ஏன் தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது? என கேள்வி எழுப்பிய தீா்ப்பாயம் இது தொடா்பாக ஆவின் நிா்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, உறுப்பினா் சத்யகோபால் ஆகியோா் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆவின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் , நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வேறு மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்தி பால் வழங்குவது குறித்து ஆராய்ந்து வருகிறோம். அதன்படி, மாற்று வழிகளை சில நிறுவனங்கள் கொண்டு வந்துள்ளன. இதற்கான செயல் விளக்கங்களை அந்த நிறுவனங்கள் இரு வாரங்களுக்குள் வழங்கவுள்ளன எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து நீதிபதி, நெகிழி பாக்கெட்டுகளால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதைத் தடுக்க ஆவின் நிா்வாகம் நிரந்தர தீா்வை கொண்டு வரும் என நம்புகிறோம் எனக் கூறி விசாரணையை ஏப்ரல் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.