
வரும் 2025-26 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பலராலும் வரவேற்கப்படும் பத்து முக்கிய அறிவிப்புகள் என்னவென்றால்..
தமிழக நிதிநிலை அறிக்கைய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.
அதில் எண்ணற்ற அறிவிப்புகள் வெளியாகின. அதில் முக்கியமான அறிவிப்பாக இருப்பது.
1. சென்னைக்கு அருகே புதிய நகரம்
சென்னைக்கு அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த புதிய நகரம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு முதன்மையானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்த புதிய நகரம், மெட்ரோ வசதி, பேருந்துகள், சாலை வசதிகள் உள்ளிட்டவற்றுடன் உருவாக்கப்படும் என்றும், நகர்ப்புற சதுக்கங்கள், பூங்காக்கள் போன்ற கட்டமைப்பு வசதிகள் புதிய நகரில் அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. ஈட்டிய விடுப்பு சரண் சலுகை
கரோனா காலத்தில் நிதி நெருக்கடியின் காரணமாக ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணம் பெறும் முறை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப்பலன் பெறும் சலுகை மீண்டும் செயலாக்கத்துக்கு கொண்டுவரப்படுகிறது. வரும் ஏப்ரல் 1 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. ஆண்டுக்கு 15 நாள்கள் வரை சரண் செய்து பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிப்பு.
மேலும், காலியாக உள்ள 40,000 பணியிடங்கள், ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். அரசு ஊழியர்களுக்கு வங்கிகளில் கடன் பெற சலுகை போன்ற அறிவிப்புகளும் இணைந்துள்ளன.
இதையும் படிக்க.. தமிழக அரசின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் - முழு விவரம்
3. சென்னைக்கான முக்கிய அறிவிப்பு
சென்னை விமான நிலையம், கிளாம்பாக்கம் இடையே ரூ.9335 கோடியில் மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகள். கோயம்பேடு - பட்டாபிராம், பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதூர் இடையே மெட்ரோ ரயில் சேவை உருவாக்கப்படும். சென்னை கிண்டியில் மெட்ரோ, பேருந்து, ரயில் போக்குவரத்தை இணைக்க ரு.50 கோடியில் பன்முக மையம். பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் தடம் வரும் டிசம்பரில் செயல்பாட்டுக்கு வரும். ரூ.88 கோடியில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள். வேளச்சேரியில் புதிய பாலம் கட்டப்படும். ரூ.310 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
4. கல்வித் துறையில்..
பெற்றோரை இழந்த 50 ஆயிரம் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 உதவித் தொகை வழங்கப்படும். ஐந்து ஆண்டுகளுக்குள் உலக தரவரிசையில் அண்ணா பல்கலைக்கழகத்தை முன்னிலைப்படுத்தவும், ஆசியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும். அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மேலும் 15,000 இடங்கள் அமைக்கப்படும். வளர்ந்து வரும் துறைகளில் புதிய பட்டப்படிப்புகள் உருவாக்கப்படும்.
5. கல்லூரி மாணவர்களுக்கு கணினி
20 லட்சம் கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும். கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விரும்பும் வகையில் கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும்.
இதையும் படிக்க.. ஒரு ரூபாயில் தமிழகத்தின் வரவு - செலவு கணக்கு!
6. தாயுமானவர் திட்டம்
பெற்றோரை இழந்து, மிகவும் வறிய நிலையில் உள்ள 50 ஆயிரம் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 உதவித் தொகை வழங்கப்படும். இவர்கள் பள்ளிப் படிப்பை இடைநிற்றல் இன்றி தொடரவும், கல்லூரியில் சேரவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
7. பத்திரப்பதிவில் சலுகை
ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களில், பெண்கள் பெயரில் அசையா சொத்துகள் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில், ரூ.10 லட்சம் வரை பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் அசையா சொத்துகளுக்கு பதிவு கட்டணம் 1 சதவீதம் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துகளுக்கும் இது பொருந்தும்.
8. தொல்லியல் அகழாய்வு
தமிழகத்தில் 8 இடங்கள், பிற மாநிலங்களில் 3 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் நடத்தவும், ஈரோடு மற்றும் ராமநாதபுரத்தில் தொல்லியல் அருங்காட்சியகங்கள் அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
9. கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி
ஒரு நோய்க்கு தடுப்பூசி இருந்தும், அதன் கட்டணம் காரணமாக பலராலும் கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள இயலவில்லை. இதனால், பரவிவரும் கருப்பைவாய் புற்றுநோயை தடுப்பதற்கான எச்பிவி தடுப்பூசி 14 வயதுடைய அனைத்து பெண் குழந்தைகளுக்கும் படிப்படியாக செலுத்தப்படும். இதற்கான ரூ. 36 கோடி ஒதுக்கப்படுகிறது என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
10. தொழில்துறைக்கு முன்னுரிமை
ஒசூர் மற்றும் விருதுநகரில் புதிய டைடல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். இதன்மூலம் 6,600 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவார்கள். மதுரை, கடலூரில் ரூ.250 கோடியில் காலணித் தொழிற்பூங்கா, 9 இடங்களில் ரூ.3,566 கோடியில் புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். பத்து லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.2.5 லட்சம் கோடி வங்கிக் கடன் வழங்கப்படும் என்பவை சிறப்பான அறிவிப்புகளாக மக்களால் பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.