தமிழக பட்ஜெட் எப்படி இருந்தது? அரசியல் கட்சிகளின் கருத்து!

தமிழக நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் அது குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துகள்
தமிழக பட்ஜெட்
தமிழக பட்ஜெட்
Published on
Updated on
2 min read

வரும் 2025 - 26ஆம் நிதியாண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகளும் இது குறித்து தங்களது கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

மக்கள் உணர்வுகளை பிரதிபலித்துள்ளது; சில எதிர்பார்ப்புகளும் தொடர்கிறது - இந்தியக் கம்யூனிஸ்ட்

பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் கல்வி வசதிக்காக 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2000 வழங்கும் திட்டம், தொல்லியல் ஆய்வுகளுக்கும், அருங்காட்சியகங்கள் அமைக்கவும் முன்னுரிமை, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் டைடல் பூங்காக்கள், தொழில் பேட்டைகள் தகவல் தொழில்நுட்ப வளாகங்கள், பெண் தொழில் முனைவோர் உருவாக்கும் திட்டம், மூன்றாம் பாலினத்தவர்களை ஊர்க்காவல் படையில் தேர்வு செய்வது போன்றவை பெருமிதம் கொள்ளவைக்கிறது.

தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு வசதி, மெட்ரோ ரயில் திட்டம், விமான நிலைய விரிவாக்கம், அதிக அன்னிய முதலீடு ஈர்க்கப்பட்டதில் நிதிநிலை அறிக்கை பெருமிதம் கொள்கிறது என்று தெரிவித்திருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன்,

அரசின் துறைகளில் ஒப்பந்தப் பணியாளர்களாக பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் பணி பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை. சொற்பத்தொகை தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் கவனிக்கத் தவறியது வருத்தம். நூறுநாள் வேலைத் திட்டத்திற்கு தொழிலாளர் ஊதியப் பாக்கி உட்பட ரூ.3 ஆயிரத்து 896 கோடி நிதி வழங்க மறுத்து வருவதை கடுமையான குரலில் கண்டித்திருக்க வேண்டும். சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர் மின் கட்டணத்தில் சலுகை கோரி வருவதையும், நிலைக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருவதையும் நிதி நிலை அறிக்கை கருத்தில் கொண்டிருக்க வேண்டும். 2025- 26 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை சமூகத்தின் பல தரப்பு மக்களின் உணர்வுகளை பிரதிபலித்துள்ள போதிலும், தொழிலாளர்கள், அடித்தட்டு உழைக்கும் மக்களின் எதிர்பார்ப்பு தொடர்கிறது என்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.

யாருக்கும் எதுவுமில்லை.. பாமக

தமிழக பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை, முதன்மைத் துறைகளுக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நிதிநிலை அறிக்கை குறித்து அவர் கூறியிருப்பதாவது, எல்லோருக்கும் எல்லாம் என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைக் குறித்த பிரசாரம், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு யாருக்கும் எதுவும் இல்லை என்ற எதார்த்தத்துடன் நிறைவடைந்திருக்கிறது. கல்வி, மருத்துவம், வேளாண்மை போன்ற முதன்மைத் துறைகளுக்கு போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மாணவர்களுக்கு இலவச கணினி போன்ற சில கவர்ச்சியான அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலும் கூட, அவை மக்களை ஏமாற்றும் அறிவிப்புகளாக உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நடப்பாண்டில் வருவாய்ப் பற்றாக்குறை இருக்காது என்றும், ரூ.1000 கோடிக்கும் மேல் வருவாய் உபரி கிடைக்கும் என்றும் தமிழக அரசு கூறி வந்த நிலையில், ரூ.41,634.93 கோடி வருவாய்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

நிதிப்பற்றாக்குறை ஒரு லட்சம் கோடியைத் தாண்டி விட்ட நிலையில் நிலைமையை சமாளிக்க நடப்பாண்டில் ரூ.1.62 லட்சம் கோடியை தமிழக அரசு கடனாக வாங்க இருக்கிறது. இதனால் 2025-26ஆம் ஆண்டின் முடிவில் தமிழக அரசின் கடன் ரூ. 9 லட்சத்து 29,959 கோடியாக அதிகரிக்கும்.

அதற்கான வட்டியாக மட்டும் ரூ.70,753 கோடி செலுத்த வேண்டியிருக்கும். நடப்பாண்டின் முடிவில் தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1.25 லட்சம் கடன் வாங்கப்பட்டிருக்கும். மொத்தத்தில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மக்களுக்கு பயனளிக்காத, கடன்சுமையை மட்டுமே அதிகரிக்கக்கூடிய நிநிநிலை அறிக்கை என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வெற்று விளம்பரங்களும், ஸ்டிக்கர்களும் நிறைந்த பட்ஜெட் ; பாஜக

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கையில், அடுத்த ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தல் நடக்க உள்ளதால், 2026ல் முழு அளவிலான பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது. இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்ய முடியும். வெற்று விளம்பர திமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இது தான். வழக்கம்போல் வெற்று அறிவிப்புகள் மட்டுமே பட்ஜெட் உரையில் இடம் பெற்றுள்ளன. தொழிற்பூங்காக்கள், தொழிற் பயிற்சி நிலையங்கள், தொழிற்பேட்டைகள் என பட்ஜெட்டில் அறிவிப்பு மட்டும் தான் உள்ளது. ஆண்டுதோறும் பட்ஜெட்டில் அறிவித்தால் போதுமா? திட்டங்களை செயல்படுத்துவது எப்போது? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தமிழகம் வளர்ச்சி அடைந்திருப்பது உண்மைதான். ஆனால், இந்த சாதனைக்கு சொந்தகாரர்கள் ஒவ்வொரு தமிழரும் தான். தமிழ்நாடும், தமிழரும் இதற்காக பெருமைப்பட முடியும். இராஜாஜி மற்றும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலங்களில் உருவாக்கப்பட்ட அடிப்படை கட்டமைப்புகளை தமிழகம் என்றென்றும் மறக்க முடியாது. இதற்கு, இதுவரை தமிழகத்தில் பொறுப்பில் இருந்த அனைத்து அரசுகளின் பங்களிப்பும் உள்ளது என்றம் எல். முருகன் கூறியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com