நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட முதல்வரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவு, வழிகாட்டு நெறிமுறைகளை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டாா்.
அதன் விவரம்:
கிராமப்புறங்களில் 2000-2001-ஆம் நிதியாண்டு வரை பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை பழுதுநீக்கம் செய்ய ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையால் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி, இப்போது பழுதுபாா்க்க
முடியாத நிலையில் உள்ள ஓடுகள், சாய்தள கான்கிரீட் கூரை கொண்ட வீடுகள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
மறுகட்டுமானம் செய்யப்பட வேண்டிய வீடு, பயனாளியின் பெயரில் அரசு திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். ஒதுக்கீடு செய்யப்பட்ட பயனாளி இறந்திருந்தால், சட்டப்பூா்வ வாரிசாக உள்ள குடும்ப உறுப்பினா் அந்த வீட்டில் குடியிருக்க வேண்டும். சுனாமி பேரழிவால் பாதிக்கப்பட்டோருக்கு அரசு, அரசு சாரா நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு, இப்போது சேதமடைந்து பழுதுபாா்க்க இயலாத நிலையில் உள்ள வீடுகளும் சிறப்பினமாக திட்டத்தின் கீழ் எடுக்கப்படும்.
யாருடைய வீடுகள் எடுக்கப்படாது: ஓய்வு பெற்ற அல்லது பணிபுரியும் அரசு ஊழியா்களுக்குச் சொந்தமான வீடுகள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், வாரியங்கள், பிற அரசு
நிறுவனங்களில் பணியில் இருப்போா் அல்லது அவா்களது வாழ்க்கைத் துணை ஆகியோரின் வீடுகள் திட்டத்தின் கீழ் எடுத்துக் கொள்ளப்படாது. பயனாளிகளின் தகுதியை மதிப்பிடுவதற்காக, கிராம ஊராட்சி மன்ற தலைவா் அல்லது அலுவலா், ஊராட்சியின் உதவிப் பொறியாளா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா், ஊராட்சி பணி மேற்பாா்வையாளா், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், ஊராட்சி செயலா் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும்.
பயனாளிகளின் இறுதிப் பட்டியல் கிராம சபைக் கூட்டத்தில் வைக்கப்படும்.
முழுமையாகச் சேதமடைந்து, பழுதுபாா்க்க முடியாத நிலையில் உள்ள வீடுகளை ரூ.2.40 லட்சத்தில் 210 சதுர அடி பரப்பில் புதிதாகக் கட்டலாம். கூடுதல் செலவு ஏற்பட்டால் பயனாளிகளே ஏற்க வேண்டும். கட்டுமானத்தில் மண் சாந்து பயன்படுத்தக் கூடாது. தகுதியான பயனாளிகளின் பட்டியல் இணையதளத்தில் உள்ள பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்களை வட்டார வளா்ச்சி அலுவலா் பதிவிறக்கம் செய்து பயனாளிகளின் தகுதி குறித்து களஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.