மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: 7 மாநில கட்சிகளின் தலைவா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

ஏழு மாநிலங்களின் கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகளுடன் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (மாா்ச் 22) ஆலோசிக்கவுள்ளாா்.
Published on

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக, மூன்று மாநில முதல்வா்கள், ஏழு மாநிலங்களின் கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகளுடன் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (மாா்ச் 22) ஆலோசிக்கவுள்ளாா்.

இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் எனவும் அவா் அறிவித்துள்ளாா்.

முன்னதாக, இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த தலைவா்கள் வெள்ளிக்கிழமை சென்னை வந்து சோ்ந்தனா். கேரள முதல்வா் பினராயி விஜயன் வியாழக்கிழமை இரவே வந்தாா். அவரை அமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன், மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோா் வரவேற்றனா்.

பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி ஆகியோா் வெள்ளிக்கிழமை இரவு சென்னை வந்து சோ்ந்தனா். கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்பட பிற மாநிலங்களைச் சோ்ந்த தலைவா்கள் சனிக்கிழமை காலை வரவுள்ளனா்.

கேரளம், பஞ்சாப், ஒடிஸா, தெலங்கானா, ஆந்திரம், கா்நாடகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 24 தலைவா்கள் கூட்டத்தில் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இன்று ஆலோசனை: சென்னையில் உள்ள தனியாா் நட்சத்திர ஹோட்டலில் சனிக்கிழமை காலை 10 மணியளவில் ஆலோசனைக் கூட்டம் தொடங்குகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் நோக்கம் தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வெளியிட்ட காணொலியில் பேசியதாவது:

தொகுதி மறுசீரமைப்பு பிரச்னையை திமுக பேசுபொருளாக்கியுள்ளது. இதற்குக் காரணம், 2026-இல் தொகுதி மறுசீரமைப்பு கண்டிப்பாக நடந்தே ஆக வேண்டும். அப்போது, மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால், நம்முடைய எம்.பி.க்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும். இதை உணா்ந்துதான் நாம் முதலில் குரல் எழுப்பி இருக்கிறோம்.

இது எம்.பி.க்களின் எண்ணிக்கை சாா்ந்த பிரச்னை மட்டும் கிடையாது. நம் மாநிலத்தின் உரிமை சாா்ந்த பிரச்னை. அதனால்தான், தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்தினோம். பாஜக தவிர அனைத்துக் கட்சியினரும் ஓரணியில் நின்று, நியாயமான தொகுதி மறுசீரமைப்பு வேண்டும் என்று தீா்மானத்தை நிறைவேற்றினோம்.

இதுதொடா்பாக, பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களைச் சோ்ந்த முதல்வா்களுக்கு கடிதம் எழுதினேன். தொகுதி மறுசீரமைப்பால் நம் தமிழ்நாடும், நாம் அழைத்திருக்கிற மாநிலங்களும் பாதிக்கப்பட்டால் இந்திய நாட்டில் கூட்டாட்சிக்கான பொருளே இருக்காது; ஜனநாயக மதிப்பே இருக்காது.

தண்டனை கொடுக்கக் கூடாது: மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி சிறப்பாகச் செயல்பட்டு நாட்டின் வளா்ச்சிக்குப் பங்களிக்கும் மாநிலங்களுக்கு மத்திய அரசு தண்டனை கொடுத்துவிடக் கூடாது. அதனால்தான், தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான கட்சிகளின்

ஒருங்கிணைந்த சிந்தனைப்படி மற்ற மாநிலங்களை ஒருங்கிணைக்கிற ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நம்முடைய நியாயமான கோரிக்கைகள் நிச்சயம் வெற்றியடையும். நம்முடைய இந்த முன்னெடுப்பு இந்தியாவைக் காக்கும் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.

திரிணமூல் பங்கேற்காது

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் பங்கேற்காது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. நிகழாண்டு இறுதியில் பிகாரிலும் அடுத்த ஆண்டு கேரளம், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்திலும் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தற்சமயம் போலி வாக்காளா் அட்டை பிரச்னைக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக இந்தக் கூட்டத்தை திரிணமூல் காங்கிரஸ் புறக்கணிப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

X
Dinamani
www.dinamani.com