

நமது சிறப்பு நிருபர்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தில்லியில் செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்தார்.
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை பிற்பகலில் தில்லி வந்தார். தில்லியில் நட்சத்திர ஹோட்டலில் தங்கிய அவர், தில்லி சாகேத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட அதிமுக அலுவலகத்துக்குச் சென்றார். இந்த அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி காணொலி வழியாக கடந்த பிப்.10-ஆம் தேதி சென்னையிலிருந்து திறந்து வைத்தார்.
மாலையில் அதிமுக நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி, கே.பி. முனுசாமி ஆகியோர் தனியாக விமானத்தில் தில்லிக்கு வந்தனர். எடப்பாடி பழனிசாமியும், அதிமுக நிர்வாகிகளும் அமித் ஷாவை சந்திக்க இரவு 8 மணி அளவில் நேரம் ஒதுக்கப்பட்டது.
அதன்படி, இரவு 8.18 மணிக்கு எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ண மேனன் சாலையில் உள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டுக்கு வந்தார். அவருடன் வேலுமணி, கே.பி.முனுசாமி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் சி.வி. சண்முகம், சந்திரசேகர் உள்ளிட்டோரும் வந்தனர். தம்பிதுரை தனியாக வேறொரு காரில் அமித் ஷா வீட்டுக்கு வந்தார்.
பின்னர், சுமார் 8.30 மணியளவில் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமியும், அதிமுக நிர்வாகிகளும் சந்தித்தனர். தமிழக சட்டம் - ஒழுங்கு நிலைமை, அரசு மீதான முறைகேடு விவகாரங்கள் குறித்து உள்துறை அமைச்சருடன் அவர்கள் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டது. தேசிய கல்விக் கொள்கை, இருமொழிக் கொள்கை போன்ற விவகாரங்கள் குறித்தும் அதிமுகவின் நிலைப்பாட்டை எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
கூட்டணிப் பேச்சு?: அதேபோன்று 2026-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-அதிமுக மீண்டும் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது: இந்தச் சந்திப்பின்போது, அமித் ஷாவும் எடப்பாடி கே. பழனிசாமியும் மட்டும் தனியாக 15 நிமிஷங்கள் பேசியுள்ளனர். குறிப்பாக, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தற்போது அதிமுகவுடன் இணக்கமாக இருப்பது குறித்து இருவரும் பகிர்ந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதிமுக தரப்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேரத் தயார் என்றும், கூட்டணி அதிமுக தலைமையில் அமைய வேண்டும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர். ஓ.பன்னீர்செல்வம், சசிகலா விவகாரங்களில் தங்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜி.கே.வாசன் சந்திப்பு: முன்னதாக, தமாகா தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசனும் அமித் ஷாவை நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்தார். தமிழக அரசியல் தொடர்பாக அமித் ஷாவை ஜி.கே. வாசன் சந்திப்பதாக உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் கூறப்பட்டது.
தமிழகத்தில் 2026-இல் மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வரும்: அமித் ஷா
நமது சிறப்பு நிருபர்
தமிழகத்தில் 2026-இல் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆட்சிக்கு வந்தால் மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும் என்று மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
மாநிலங்களவையில் "பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024' மீது செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற அதிமுக உறுப்பினர் மு. தம்பிதுரை, தமிழகத்தில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் வெள்ளத் தடுப்பு நிலைமை சிறப்பாக செயல்பட்ட விதத்தையும், தற்போது மாநிலத்தில் ஆளும் திமுக அரசு செயல்படும் விதத்தையும் ஒப்பிட்டுப் பேசினார்.
அப்போது, தமிழகத்தில் கரைபுரண்டோடும் கள்ளச்சாராய வெள்ளம் மிகவும் அபாயகரமானது. அத்தகைய வெள்ளத்தை நாங்கள் எதிர்கொள்கிறோம். மாநிலத்தில் கரைபுரண்டோடும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.
தற்போதைய மாநில அரசு, ஒதுக்கப்படும் நிதியை உரிய வகையில் பயன்படுத்தாமல் வேறு விஷயங்களுக்குத் திருப்பி விடுகிறது என்று தம்பிதுரை குற்றஞ்சாட்டினார். அவரது கருத்துகளுக்கு அவையில் இருந்த திமுக உறுப்பினர்கள் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தபடி இருந்தனர்.
மாநிலங்களவையில் விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தம்பிதுரை சுட்டிக்காட்டிய விஷயங்களைக் குறிப்பிட்டு "அவர் (தம்பிதுரை) எதற்கும் கவலைப்பட வேண்டாம். 2026-இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும் என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, தனது பதிலின் காணொலியையும் அலுவல்பூர்வ "எக்ஸ்' பக்கத்தில் அமித் ஷா பகிர்ந்தார்.
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை நண்பகலில் தில்லிக்கு வந்த நிலையில், மாலையில் நாடாளுமன்ற அலுவலின்போது 2026-இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வருவது தொடர்பாக அமித் ஷா வெளியிட்ட கருத்து, அரசியல் முக்கியத்துவத்தைப் பெற்றது. இதற்கு ஏற்றாற்போல, இரவு சுமார் 8 மணியளவில் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்ததும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.