அட்சய திருதியை: ரூ.12,000 கோடிக்கு தங்கம் விற்பனை

அட்சய திருதியை நாளில் ரூ.12,000 கோடிக்கு தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அட்சய திருதியை முன்னிட்டு நகைக்கடை ஒன்றில்..
அட்சய திருதியை முன்னிட்டு நகைக்கடை ஒன்றில்..
Published on
Updated on
2 min read

அட்சய திருதியையொட்டி, ரூ.12,000 கோடிக்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டதாக அனைத்திந்திய நகை கடை உரிமையாளா்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

விலை கடுமையாக உயர்ந்திருந்தபோதும், இந்த அட்சய திருதியை நாளில் இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளியின் விற்பனை வழக்கம் போல அதிகரித்தே காணப்பட்டது.

இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம், வெள்ளி விலைகள் உயர்ந்து விற்பனையாகி வரும்போதிலும், ஒட்டுமொத்த வர்த்தகம் ரூ.16,000 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (CAIT) தகவல்படி, அட்சய திருதியை நாளில் சுமார் ரூ12,000 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் தங்கப் பொருள்கள் விற்பனையாகியுள்ளன.

கடுமையான விலையேற்றம் காரணமாக, தங்கம் வாங்குவதில் மாற்றம் ஏற்படுமோ என்று தங்க நகைக் கடை வணிகர்கள் சந்தேகத்தில் இருந்தனர். ஆனால், தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்கள் அவர்களை ஏமாற்றவில்லை. வழக்கம் போல நகைக் கடைகளில் கூட்டம் அலைமோதியதாகவும், வழக்கமான அளவில் விற்பனை இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அட்சய திருதியை மீதான நம்பிக்கை மற்றும் மூகூர்த்த காலங்கள் நெருங்குவதால், தங்க நகையின் மவுசு குறையவில்லை என்றும் கூறியுள்ளனர்.

விலை உயர்ந்து காணப்பட்டாலும் தேவையும் அதிகமாகவே இருக்கிறது. கடந்த ஆண்டு 10 கிராம் தங்கம் ரூ.72,300 ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு விலையில் 38 சதவீதம் உயர்ந்து ரூ.99.500 முதல் ரூ.99,900 வரை விற்பனையானாலும் மக்கள் வாங்குவது குறையவில்லை. விலையேற்றத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவே செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு 20 டன் தங்கம் விற்பனையானது. இந்த ஆண்டு விற்பனையான தங்கத்தின் அளவு 8-9 சதவீதம் குறைந்திருக்கலாம், ஆனால், கொடுத்த மதிப்பு 20-25 சதவீதம் அதிகரித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த ஆண்டு பெரும்பாலானோர் பழைய தங்க நகைகளைக் கொடுத்துவிட்டு புதிய தங்க நகைகளை வாங்கியதாகவும், இதனால், தங்கம் விலை உயர்ந்து காணப்பட்டாலும் அதனால் வாங்கும் திறன் குறையவில்லை என்றும் வியாபாரிகள் கூறியிருக்கிறார்கள்.

தமிழகத்தில்..

சென்னையில் 5000 உள்பட தமிழகம் முழுவதும் 50,000 சிறிய மற்றும் பெரிய நகைக்கடைகள் உள்ளன. இந்த கடைகளில், அட்சய திருதியையொட்டி புதன்கிழமை காலை 6 மணி முதல் ஏராளமானோா் வந்து நகைகளை வாங்கிச் சென்றனா்.

நாட்டிலேயே இந்த ஒரு நாளில் மட்டும் ரூ.12,000 கோடிக்கு தங்கம் விற்பனையானதாக நகை வியாபாரிகள் தெரிவித்தனா்.

கடந்த 2023ஆம் ஆண்டு அட்சய திருதியையொட்டி, ரூ.9,000 கோடி மதிப்பில் 18 டன் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 2024ல் அட்சய திருதியை இரு நாள்கள் வந்ததால் ரூ.11,000 கோடி மதிப்பிலான 20 டன் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு ரூ.12,000 கோடிக்கு தங்கம் மட்டும் விற்பனையாகியிருக்கிறது.

அட்சய திருதியை

அட்சய என்பதற்கு வளர்க என்று பொருள். எனவே அட்சய திருதியை நாளில் அதாவது சித்திரை மாதம் அமாவாசையிலிருந்து மூன்றாவது நாளில் மூன்றாம் பிறையன்று அட்சய திருதியை நாளாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நன்னாளில் செய்யும் செயல்கள் வளரும் என்பது நம்பிக்கை. அதன்படி, அன்று அதிக தான தர்மங்கள் செய்யவும், வீட்டுக்கு அவசியமான அரிசி, உப்பு மற்றும் மங்களகரமான பொருள்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதும் நமது முன்னோர்களின் வழக்கமாக இருந்துள்ளது.

ஆனால், அண்மைக் காலமாக நகைக்கடைகளின் விளம்பரத்தினால், அட்சய திருதியை என்றாலே நகைக் கடைகளில் நகை வாங்குவது மட்டுமே நோக்கமாக மாற்றப்பட்டு, அதன் அடிப்படை வழக்கமே மாறிப்போயிருக்கிறது.

அந்த வகையில், நேற்று நகைக் கடைகள் கொண்டாடும் அட்சய திருதியை நாள் என்பதால், தமிழகம் முழுவதும் நகைக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. கோடைக் காலம் என்பதால், காலையில் நகைக்டை திறந்ததுமே சென்று நகைக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com