பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதிப்பு
பொள்ளாச்சி வழக்கு
பொள்ளாச்சி வழக்கு
Published on
Updated on
2 min read

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சுமார் ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் குற்றவாளி சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனையும், திருநாவுக்கரசுக்கும் ஐந்தாவது குற்றவாளி மணிவண்ணனுக்கும் தலா 5 ஆயுள் தண்டனையும், மூன்றாவது குற்றவாளி சதீஷ்-க்கு 3 ஆயுள் தண்டனையும், 6வது குற்றவாளி பாபு, 8வது குற்றவாளி அருளானந்தம் மற்றும் 9-வது குற்றவாளி அருண்குமார் ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும், குற்றவாளி வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனையும், ஹரன்பால்-க்கு 3 ஆயுள் தண்டனையும் பிறப்பித்து நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்துள்ளார்.

தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி இன்று காலை, குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்திருந்த நிலையில், பகல் 12 மணிக்கு குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை வெளியிட்டார்.

தீர்ப்பு இன்று வழங்கப்பட்ட நிலையில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகள் 9 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கின் பின்னணி என்ன?

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, விடியோ எடுத்து மிரட்டி, மீண்டும் மீண்டும் வன்கொடுமை செய்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தக் குற்றச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி ஒருவர் பொள்ளாச்சி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

தொடர்ந்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் ஒவ்வொருவராகக் கைது செய்யப்பட்டு வந்தனர். பிறகு, இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு, இதில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட இளம் பெண்களும் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு உளவியல் ரீதியாக ஆலோசனைகள் வழங்கி பின்னர் இந்த வழக்கில் சாட்சியமளிக்க ஒப்புக்கொண்டனர். பாதிக்கப்பட்ட பெண்கள் தாமாக முன்வந்து, சுதந்திரமாகவும் தைரியமாகவும் கடைசி வரை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரீசன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருண்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, அத்துமீறல், கூட்டு சதி, தடையங்கள் அழிப்பு என 13 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த இந்த வழக்கில் 50க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த நிலையில்தான் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியிருக்கிறது. இதற்காக சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சபரீசன், திருநாவுக்கரசு உள்ளிட்ட ஒன்பது பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதற்காக, அதிகாலை 5 மணி அளவில் சேலம் மத்திய சிறையில் இருந்து வேன் மூலமாக குற்றவாளிகள் 9 பேரும் கோவைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com