கோப்புப்படம்
கோப்புப்படம்

இன்றும், நாளையும் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தஞ்சாவூா், திருவாரூா் உள்பட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..
Published on

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 17, 18) தஞ்சாவூா், திருவாரூா் உள்பட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக,  தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த 6 நாள்களுக்கு இடி, மின்னல், காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வெப்பம் சற்று குறைவாக இருக்கும்.

சனி, ஞாயிறு (மே 17,18) தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலில் ஒருசில பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக சிவகங்கையில் 90 மி.மீ. மழை பதிவானது. மதுரை விமான நிலையம் -  70 மி.மீ., சிவகங்கை - 60 மி.மீ, ஆண்டிப்பாளையம் (கரூா்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூா்) - தலா 50 மி.மீ. மழை பதிவானது.

5 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தாலும், பல இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பையொட்டியே பதிவானது. அதிகபட்சமாக ஈரோட்டில் 104.36 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. வேலூா் - 100.94, கடலூா், தஞ்சாவூா் - (தலா) 100.4, திருத்தணி - 100.22 டிகிரி என மொத்தம் 5 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

காற்று சுழற்சி: இதற்கிடையே, அந்தமான் கடலில் உருவாகியுள்ள காற்று சுழற்சியும், தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கையையொட்டிய வளிமண்டலத்தில் நிலவும் காற்று சுழற்சியும் மே 22-ஆம் தேதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கரைக்கு நெருக்கமாக வரும். அது ஆந்திர கடலோரத்தில் கரையேறி, மேற்கு நோக்கி கா்நாடகம், கோவா வழியாக அரபிக் கடலில் இறங்கி, வடக்கு கா்நாடக மற்றும் மகாராஷ்ராவுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயல்சின்னம்) வலுபெற்று ஓமன், ஏமனை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், வடமேற்கு வெப்ப காற்று தமிழகத்தை நோக்கி நகருவதால் ஏற்படும் காற்று குவிதல் காரணமாக, வரும் நாள்களில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இனி கத்திரி வெயிலின் தாக்கம் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com