பாலியல் குற்றங்கள் கடுமையாகக் கையாளப்பட வேண்டும்: அண்ணாமலை

ஞானசேகரன் குற்றவாளி என்ற தீர்ப்பு குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிவு.
annamalai
அண்ணாமலை
Published on
Updated on
1 min read

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக நிர்வாகி ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பான வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், குற்றவாளி ஞானசேகரனுக்கான தண்டனை விவரம் ஜூன் 2 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

கைதான ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 12 குற்றச்சாட்டுகளில், 11 குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி உள்ளது.

குற்றவாளி ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் கருணைை காட்டக் கூடாது என அரசு தரப்பு வழக்குரைஞர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில்,

"சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை நடத்திய திமுக நிர்வாகி ஞானசேகரன், குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது.

பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளும் பாலியல் குற்றங்களும் கடுமையாகக் கையாளப்பட வேண்டும். இது போன்ற குற்றங்கள் மீண்டும் நடக்காதபடி, நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இதுபற்றி,

தமிழகத்தையே உலுக்கிய சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுகவின் உடன்பிறப்பான ஞானசேகரன் குற்றவாளி என்பதை உறுதிபடுத்திய சென்னை மகளிர் நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பை மனதார வரவேற்று மகிழ்கிறேன்.

பெண்களின் மீது வன்முறை ஏவுபவர்கள் அரசியல் பின்புலமும் பணபலமும் கொண்டவர்களாக இருந்தாலும், சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை மீண்டுமொருமுறை உணர்த்தியுள்ள இந்த தீர்ப்பு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நம்பிக்கையையும் புத்துணர்வையும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.

பெண்கள் தைரியமாக தங்களுக்கு நேரும் கொடுமைகள் குறித்து புகாரளிக்கவும் இதுபோன்ற தீர்ப்புகள் துணை நிற்கும். அரசியல் ரீதியாக எத்தனை மிரட்டல்கள் வந்தாலும், பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையே தனது முழுவிபரத்தை வெளியிட்டு பழி வாங்கினாலும் மனம் தளராது நீதிக்காக போராடி இன்று அதில் வெற்றி கண்டுள்ள அந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எனது பாராட்டுகள்!

அதற்கு துணை நின்ற அனைத்து வழக்கறிஞர்களுக்கும் நீதிமான்களுக்கும் எனது வாழ்த்துகள்! ஆயிரம் தடைகள் வரினும் அறமே வெல்லும்!" என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com