ஐந்தே மாதத்தில் நீதி; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்: மு.க. ஸ்டாலின்

ஐந்தே மாதத்தில் நீதி வழங்கப்பட்டுளள்து, பெண்களின் பாதுகாப்பை எந்நாளும் உறுதி செய்வோம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
Published on
Updated on
1 min read

சென்னை: பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஐந்தே மாதத்தில் நீதி வழங்கப்பட்டுள்ளது. சட்ட நீதியையும் பெண்கள் பாதுகாப்பையும் எந்நாளும் உறுதிசெய்வோம் என்று தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிா் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கில் ஆறு மாதங்களுக்குள் விசாரணை முடிந்து தீா்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, சென்னை மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வழக்கைத் துரிதமாக நடத்தி, ஐந்தே மாதத்தில் நீதியைப் பெற்றுத் தந்துள்ளது நமது காவல்துறை. விசாரணை அதிகாரிகளுக்கும் அரசு வழக்கறிஞர்களுக்கும் மாண்பமை நீதிமன்றத்துக்கும் நன்றி!

காவல்துறையினரிடம் நான் தொடர்ந்து கூறுவது: “குற்றம் நடக்கக் கூடாது; நடந்தால் எந்தக் குற்றவாளியும் தப்பக் கூடாது; விசாரணையைத் துரிதமாக நடத்தி, தண்டனை பெற்றுத் தர வேண்டும்!”.

குற்றங்களின் கூடாரமாக அன்று அரசை நடத்தி, இன்று அவதூறுகளை அள்ளித் தெளித்து, மலிவான அரசியல் செய்யத் துடித்த எதிர்க்கட்சியினரின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்கி உள்ளோம்.

சட்டநீதியையும் - பெண்கள் பாதுகாப்பையும் எந்நாளும் உறுதிசெய்வோம் என்று பதிவிட்டுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், ஞானசேகரன் என்பவா் கடந்தாண்டு டிசம்பா் மாதம் கைது செய்யப்பட்டாா். உயா்நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழு, அவருக்கு எதிராக சென்னை மகளிா் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாா்ச் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

சென்னை அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மகளிா் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேறு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதால், வழக்கு சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன் விசாரணைக்கு வந்தது. கடந்த மாா்ச் மாதம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில் உடனடியாக சாட்சி விசாரணை தொடங்கியது.

அரசு தரப்பில் 29 சாட்சிகளும், நூற்றுக்கு மேற்பட்ட ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கின் சாட்சி விசாரணை தினமும் நடைபெற்றது.

அனைத்து ஆதாரம் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, வழக்கில் இருதரப்பும் எழுத்துபூா்வமான வாதங்களும் தாக்கல் செய்யபட்டன. இந்த நிலையில் ஞானசேகரன்தான் குற்றவாளி என வழக்கின் தீா்ப்பு இன்று பிறப்பிக்கப்பட்டது. ஞானசேகரனுக்கான தண்டனை விவரம் ஜூன் 2ஆம் தேதி பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com