

தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் நடவடிக்கையால் ஒரு கோடி பேர் வாக்குரிமை இழக்க வாய்ப்பிருப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களுடன் சீமான் பேசுகையில் ``வாக்காளர்கள், தங்களுக்கான ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், தற்போது ஆட்சியாளர்கள் வாக்காளர்களைத் தேர்ந்தெடுப்பதுதான் சிறப்பு தீவிர திருத்தம். யார் வாக்கு செலுத்த முடியும் என்பதை ஆட்சியில் இருப்பவர்கள் முடிவு செய்கிறார்கள்.
திமுக ஆட்சியில் இருக்கின்றனர்; அவர்களின் வாக்குகளைச் சரிசெய்கின்றனர். அதிமுக பெரிய அமைப்பு என்பதால், அவர்களும் செய்துவிடுவர்.
ஆனால் நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் போன்று வளர்ந்து வரும் கட்சிகளால் என்ன செய்ய முடியும்? சீமான் படமிருந்தால் தூக்கி விடுவார்கள், விஜய் படமிருந்தால் தூக்கி விடுவார்கள், இஸ்லாமிய வீடு என்றாலும் தூக்கி விடுவார்கள்.
ஓகி புயலில் சிக்கிய 200 பேரை காப்பாற்றத்தான் வரவில்லை. உயிரிழந்த உடல்களை மீட்டுத் தருமாறு மக்கள் போராடினர். ஆனாலும் வரவில்லை. இறந்தவர்கள் கிறிஸ்தவ மீனவர்கள், அவர்கள் நமக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று 40,000 வாக்காளர்களை ஒரே தேர்தலில் தூக்கினீர்களா? இல்லையா? அதுபோலவே குறைந்தது ஒரு கோடி பேர் வாக்குகளை இழப்பார்கள். பெரும்பாக்கத்தில் மட்டும் 26,000 பேருக்கு வாக்குரிமை இருக்காது.
பிகாரில் 81 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியிருந்தும், அவர்களால் வாக்களிக்க முடியவில்லை. அனைத்துக்கும் ஆதார்தான் அடையாள அட்டை என்றீர்கள். ஆனால், தற்போது அது மதிப்பற்றது என்கிறீர்கள்’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: பிரியங்கா காந்தி மகன் அரசியலுக்கு வருகிறாரா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.