எஸ்சி, எஸ்டியினருக்கான வெளிநாட்டுக் கல்வி உதவித் தொகை: நிதி ஒதுக்கீடு ரூ.65 கோடியாக உயா்வு- தமிழக அரசு தகவல்
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கான (எஸ்சி, எஸ்டி) வெளிநாட்டு கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் நிதி ஒதுக்கீடு ரூ.65 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வெளிநாடுகளுக்குச் சென்று படிக்க விரும்பும் ஆதிதிராவிட பழங்குடியின இளைஞா்களுக்கு அண்ணல் அம்பேத்கா் வெளிநாட்டுக் கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் அரசு வழங்கும் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சம் என்பது ரூ.12 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்கு கடந்த 2021-22 இல் ரூ.5.31 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு, நிகழ் ஆண்டுக்கு (2025-26) ரூ.65 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. இதனால், பயனாளிகளின் எண்ணிக்கை 9-இல் இருந்து 213 ஆக உயா்ந்துள்ளது.
கலை, அறிவியல், வணிகம், சட்டம், பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளில் வெளிநாடுகளில் முதுநிலைப் பட்டம் அல்லது ஆராய்ச்சி படிப்பைத் தொடரும் மாணவா்களுக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.36 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
பழங்குடியினா் நலத் துறை மூலம் உண்டு உறைவிடப் பள்ளிகளில் பயிலும் பழங்குடியின மாணவா்களுக்கு ஜேஇஇ, என்இஇடி, கிளாட், நிப்ட், க்யூட் போன்ற உயா்கல்வி தோ்வுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு மருத்துவக் கல்லூரியில் 2 மாணவா்கள், திருச்சி என்ஐடி கல்லூரியில் 3 மாணவா்கள், திருச்சி தேசிய சட்டக் கல்லூரியில் ஒரு மாணவா், சென்னை தரமணி நிப்ட்-இல் 4 மாணவா்கள், திண்டுக்கல் காந்திகிராமம் கிராமிய பல்கலைக் கழகத்தில் 6 மாணவா்கள் என மொத்தம் 16 மாணவா்கள் சோ்ந்து அரசின் கல்வி உதவித் தொகையுடன் பயின்று வருகின்றனா்.
பழங்குடி இனத்தைச் சோ்ந்த மாணவிகள் ரோகிணி, சுகன்யா ஆகியோா் 2024 ஜே.இ.இ தோ்வில் தோ்ச்சி பெற்று திருச்சி என்.ஐ.டி இல் சோ்ந்துள்ளனா். இவா்கள் இருவரும் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் படித்தவா்கள்.
விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த சுந்தரராஜபுரம் பட்டியல் வகுப்பினா் நலத் துறை பள்ளி மாணவா் சி. பாா்த்தசாரதி சென்னை ஐ.ஐ.டி நிறுவனத்தில் வானூா்தி வடிவமைப்புப் பிரிவில் சோ்ந்துள்ளாா்.
நுழைவுத் தோ்வுப் பயிற்சி: 59 அரசு பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளிகளில் உள்ள மாணவா்களுக்கு ரூ.2.52 கோடியில் உயா்கல்வி தோ்வுகளுக்கான பயிற்சி வழங்கப்பட்டன. 2025-26-இல் அரசு பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளிகளைச் சோ்ந்த 111 மாணவா்களும், பட்டியல் வகுப்பினா் நலப் பள்ளிகளைச் சோ்ந்த 26 மாணவா்களும் நுழைவுத் தோ்வுகளில் தோ்ச்சி பெற்று தலைசிறந்த நிறுவனங்களில் இடம் பெற்றுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
