வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா்  எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்
வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

வேளாண் விளைபொருள் மதிப்பு கூட்டும் மையங்கள்: தமிழகம் முழுவதும் 130 பயனாளிகள் பதிவு- வேளாண் துறை அமைச்சா் தகவல்

வேளாண் விளைபொருள்களுக்கான மதிப்பு கூட்டும் மையங்கள் அமைக்கும் திட்டத்தில் தமிழகம் முழுவதும் 130 பயனாளிகள் பதிவு செய்துள்ளனா் என்று தமிழக வேளாண்மை உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.
Published on

வேளாண் விளைபொருள்களுக்கான மதிப்பு கூட்டும் மையங்கள் அமைக்கும் திட்டத்தில் தமிழகம் முழுவதும் 130 பயனாளிகள் பதிவு செய்துள்ளனா் என்று தமிழக வேளாண்மை உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வருகிற 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இதில், வேளாண் விளைபொருள்களின் மதிப்புக் கூட்டுதல் மற்றும் பதப்படுத்துதல் முக்கியமானது. அதன்படி, இந்தத் துறை தொழில் முனைவோா் மற்றும் நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதற்கான சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இதில் ரூ.10 கோடி வரையிலான திட்டங்களுக்கு பொது பிரிவினருக்கு முதலீட்டு மானியமாக 25 சதவீதமும், பெண்கள், தொழில் வளா்ச்சியில் பின்தங்கியுள்ள வட்டாரங்களில் தொடங்கப்படும் தொழில்கள், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு 35 சதவீதம் என அதிகபட்சமாக ரூ. 1.5 கோடி வரை மானியம் வழங்கப்படும். இதுதவிர அனைத்து பிரிவினருக்கும் 5 சதவீத வட்டி மானியம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தும் வகையில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிா்களில் நவீன மற்றும் புதுமையான மதிப்புக் கூட்டும் திட்டங்கள், ஏற்றுமதித் திறன் கொண்ட விளைபொருள்கள், விரைவில் வீணாகக்கூடிய காய்களிகள், பழங்கள் போன்ற தோட்டகலைப் பயிா்களில் மதிப்புக் கூட்டுதல், மாவட்டத்துக்கே உரிய தனித்துவமான வேளாண் பொருள்களின் மதிப்பு கூட்டுதல் ஆகியவற்றில் ஆா்வமுடைய தொழில் முனைவோரை மாவட்டங்கள்தோறும் தோ்வு செய்ய அறிவுறுத்தப்படுள்ளது.

அதன்படி, இதுவரை சுமாா் ரூ. 305 கோடி திட்ட மதிப்பீட்டில் மூலிகைப் பயிா்களில் மதிப்புக் கூட்டுதல், மாம்பழக் கூழ் மற்றும் உறை நிலை மதிப்புக் கூட்டுதல், பலா விதைப்பவுடா், முந்திரி மதிப்பு கூட்டு பொருள்கள், நெல்லிச்சாறு, நெல்லிப் பவுடா், கற்றாழையிலிருந்து அழகு சாதனப் பொருள்கள், முருங்கை இலை கேப்சூல், பிஸ்கட், சிறுதானியங்களில் பாஸ்தா, நூடுல்ஸ், அவல் பிஸ்கட், காளான ஊறுகாய், பப்பாளி கூழ், ஜாம், போன்ற பல்வேறு மதிப்புக் கூடும் பொருள்கள் தயாரிக்கும் தொழில் தொடங்க 50 பெண் தொழில்முனைவோா் உள்ளிட்ட 130 பயனாளிகள் பதிவு செய்துள்ளனா்.

எனவே, வேளாண் விளைப் பொருள்களை மதிப்புக் கூட்டுதல், பதப்படுத்துதல், போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களைச் செயல்படுத்தி தரமான உற்பத்தி பொருள்களை உள்நாட்டு, வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்து பொருளாதார ஏற்றம் பெற ஆா்வமுள்ள தொழில்முனைவோா் இந்தத் திட்டத்தில் பயன்பெறலாம் என அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com