

ஒலிம்பிக் போட்டியில் சிறிய நாடுகள் தங்கப் பதக்கங்களை வாங்கிக் குவிக்கும்போது, 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவால் ஒரு தங்கப் பதக்கத்தைக்கூட பெற முடிவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்தது.
சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த மாணவி எஸ்.ஸ்ரீமதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், டேக்வாண்டோ போட்டியில் தேசிய மற்றும் மாநில அளவில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றுள்ளேன். கடந்த ஆண்டு பிப்ரவரியில் புதுச்சேரியில் கேலோ இந்தியா போட்டிகள் நடந்தன. எனது பயிற்சியாளர் டேக்வாண்டோ போட்டிகளுக்கான தமிழக சங்கத்தின் எதிர் அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால், காலதாமதமாகத்தான் இந்த போட்டி குறித்த தகவல் கிடைத்தது. மேலும், இந்தப் போட்டிக்கு இணையத்தில் பதிவு செய்வதற்கான இணையதள இணைப்பும் வழங்கவில்லை. இதனால், நேரில் சென்று விண்ணப்பித்தேன். ஆனால், இணையவழியில் விண்ணப்பிக்கவில்லை எனக் கூறி எனக்கு போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கவில்லை. இந்தப் போட்டியில் வாய்ப்பு மறுக்கப்பட்டால், விளையாட்டுத் துறையில் எனது எதிர்காலம் பாதிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் அமிர்தா சரயு மற்றும் சீனிவாச மோகன் ஆகியோர் மனுதாரர் ஏழ்மை நிலையில் இருக்கும் மாணவி. கடந்த ஆண்டு நடந்த டேக்வாண்டோ போட்டியில் எப்படியாவது பங்கேற்க வேண்டும் என்பதற்காக இந்த வழக்கு தொடரப்பட்டது.
ஆனால், அது முடியாமல் போய்விட்டது. எனவே, டேக்வாண்டோ போன்ற தனிநபர் விளையாட்டுகளில் சங்கங்கள், கூட்டமைப்புகளுக்கு பதிலாக வீரர், வீராங்கனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் விதிகளை வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டனர்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், கவாஸ்கர் ஆகியோர் அந்த விளையாட்டுக்கான கூட்டமைப்பை உருவாக்கினால் அதில் அர்த்தம் இருக்கிறது. அதைவிடுத்து அந்த விளையாட்டுக்குத் தொடர்பே இல்லாதவர்களை கூட்டமைப்பு நிர்வாகிகளாக நியமிப்பது எப்படி சரியாகும்? இங்கு அனைத்துமே அரசியலாக்கப்படுகிறது.
எனவேதான், ஒலிம்பிக் போட்டியில் சின்னஞ் சிறிய நாடுகள் எல்லாம் தங்கப் பதக்கங்களை வாங்கிக் குவிக்கும்போது, 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவால் ஒரு தங்கப் பதக்கத்தைக் கூட பெற முடிவதில்லை என்று வேதனை தெரிவித்தார்.
பின்னர், இந்த வழக்கை முடித்துவைத்த நீதிபதி, மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக புதிதாக மனு அளிக்கவும், அதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.