

சென்னை லயோலா கல்லூரி மற்றும் முக்கிய சுற்றுச்சூழல் அமைப்புகள் இணைந்து பசுமைப் பயணம் எனும் மிதிவண்டிப் பேரணியை நடத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுச்சூழல் அமைப்புகள், TNCRI, TNAICUF மற்றும் லயோலா கல்லூரி இணைந்து பசுமைப் பயணம் என்ற மிதிவண்டிப் பேரணியை இன்று (நவ.20) நடத்தியுள்ளனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கையைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே பரப்புவதை நோக்கமாகக் கொண்டு இந்தப் பேரணி நடத்தப்பட்டுள்ளது.
இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தப் பேரணி கன்னியாகுமரியில் துவங்கி சென்னையில் முடிந்தது. இந்த முயற்சியில் பங்கேற்ற 10 திறமையானவர்கள் தங்கள் மிதிவண்டியில் 700 கிலோமீட்டருக்கும்மேல் பயணித்து சென்னையை அடைந்தனர்.
காலநிலை மாற்றம், மரம் நடுதல் உள்ளிட்ட விஷயங்களுடன் தூய்மையான சுகாதாரமான வாழ்க்கை குறித்தும் பள்ளிகள் மற்றும் மக்களுக்குப் புரியும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
இயற்கையுடன் இணைந்து வாழ்வது இந்த சமூகத்தின் பொறுப்பு என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு லயோலா கல்லூரியின் ஆதரவுடன் இந்தப் பேரணி சிறப்பாக நடைபெற்றது. மாணவர்கள், பேராசிரியர்கள், அமைப்பாளர்கள் என அனைவரும் இணைந்து இந்தச் செய்தியை உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல உறுதி எடுத்ததுடன் இந்த மிதிவண்டிப் பேரணியில் பங்குபெற்றவர்களையும் கௌரவித்தனர்.
கடந்த நவ.5 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்தப் பேரணி நவ.19 மாலை லயோலா கல்லூரியை வந்தடைந்தது. கல்லூரியின் அருள் முனைவர் ஜே. ஆன்டனி ராபின்சன் சே.சு. (ரெக்டர் மற்றும் துணைத் தலைவர்) அருள்முனைவர் டி. தாமஸ் அலெக்சாண்டர் சே.சு. (செயலாளர் மற்றும் நிர்வாகி) அருள்முனைவர் ஏ. லூயிஸ் ஆரோக்கியராஜ் சே.சு. (கல்லூரி முதல்வர்) ஆகியோர் வரவேற்புரை வழங்கி, சுற்றுச்சூழல் பொறுப்புணர்வுக்கான பிரார்த்தனைகளுடன், மிதிவண்டி ஓட்டுநர்களை வரவேற்று கௌரவித்தனர்.
இந்த நிகழ்வில் லயோலா கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் மிதிவண்டிப் பேரணியாளர்களுடன் இணைந்து பசுமைப் பணி சார்ந்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். மேலும், TNCRI அதிகாரிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், குட் ஷெப்பர்ட் பள்ளி, பாத்திமா ஆகிய பள்ளிகள் மற்றும் AICUF மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
லயோலா கல்லூரியில் நடைபெற்ற பசுமைப் பயணம் வெற்றியடைய உதவிய அனைத்து அமைப்புகளுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் நிர்வாகம் நன்றியைத் தெரிவித்தது. மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைகளைக் கடைபிடித்து மிதிவண்டியில் பயணிக்கும் கலாசாரத்தை பின்பற்ற அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் கல்லூரியில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இதையும் படிக்க: புதிய உச்சத்தில் முட்டை விலை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.