

அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்வதற்கும் சாலை வலம் நடத்துவதற்கும் வழிகாட்டு விதிமுறைகள் தொடர்பான வரைவு அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று(வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்துள்ளது.
செப். 27 அன்று தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள், சாலை வலம் நடத்த தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கில், அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்ய, சாலை வலம் நடத்த வழிகாட்டு விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் இதுதொடர்பாக தமிழக அரசு, 10 நாள்களுக்குள் கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு விதிகளை உருவாக்கி அதனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கடந்த விசாரணையின்போது உத்தரவிட்டனர்.
அதன்படி தமிழக அரசும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி ஆலோசனை மேற்கொண்டது.
இதன்பின்னர் அரசியல் கட்சிகளின் பிரசாரங்களுக்கான வழிகாட்டு விதிமுறைகளை உருவாக்கியுள்ள நிலையில், வரைவு அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தாக்கல் செய்துள்ளது.
தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், இது தொடர்பான 25 பக்க அறிக்கை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்தார்.
ஆனால், ஒவ்வொரு விதிக்கும் ஒவ்வொரு கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் என்பதால் அறிக்கையின் நகலை அனைத்துக் கட்சிகளுக்கும் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.
எனினும் இந்த வழக்கில் மனுதாரர்களாக உள்ள அதிமுக, தவெக, தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கு மட்டும் அறிக்கையின் நகலை வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை நவ. 27-க்கு ஒத்திவைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.