

திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.
தமிழகத்தில் பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியாக ஆறு மாதங்களுக்கும் குறைவான காலமே இருக்கும் நிலையில், முன்னணி கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி தொடர்பாக தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
அதிமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் புதியதாக உதயமாகியுள்ள தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்டவை இடம்பெறுமா? என சந்தேகம் தொடர்ந்து நிலவி வருகிறது.
அதேவேளையில், பிகார் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி காரணமாக காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்துடன்கூட கூட்டணி வைக்கலாம் என பேச்சுகளும் சமீபத்தில் வெளியாகின.
இந்த நிலையில், திமுக தலைமையில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தற்போது கூட்டணி பேச்சுவார்த்தைக்காக 5 பேர் கொண்ட குழுவையும் அமைத்துள்ளது.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடலைத் தொடங்குவதற்காக, ஐந்து பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் அமைத்திருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குழுவில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா, செ. ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.