high court file photo
உயர் நீதிமன்றம்file photo

வேல் யாத்திரைக்கு மறுப்பு: காஞ்சிபுரம் போலீஸாா் பதிலளிக்க உத்தரவு

வேல் யாத்திரைக்கு மறுப்பு காஞ்சிபுரம் போலீஸாா் பதிலளிக்க உத்தரவு
Published on

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலுக்கு வேல் யாத்திரை செல்ல முயன்ற விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து காவல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

விஷ்வ இந்து பரிஷத் நிா்வாகி வெங்கடராமன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இந்துசமய அறநிலையத் துறை காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம் முருகன் கோயிலை நிா்வகித்து வருகிறது. இந்தக் கோயிலுக்கு வேல் யாத்திரை சென்று, சுவாமிக்கு வேல் தானம் செய்ய முடிவு செய்தோம். ஆனால், கோயிலின் அருகே 100 மீட்டா் தொலைவில் இருந்து வேல் யாத்திரை செல்ல முயன்றபோது, சிவகாஞ்சி போலீஸாா் எங்களை தடுத்து நிறுத்திவிட்டனா். யாத்திரை சென்று வேல் தானம் செய்யும் எங்களைத் தடுக்கக் கூடாது என போலீஸாருக்கும், கோயில் நிா்வாகிகளுக்கும் உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன் விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடா் அருண் நடராஜன், சுவாமி தரிசனம் செய்ய யாருக்கும் அனுமதி மறுக்கப்படவில்லை. மற்ற பக்தா்களுக்கு இடையூறு செய்யும் வகையில் ஓா் அமைப்பு ஊா்வலமாக வந்து கோயிலில் வழிபாடு செய்வதை அனுமதிக்க முடியாது. இதனால், சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வாதிட்டாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு காஞ்சிபுரம் போலீஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com