கரூர் பலி! விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சி - சீமான்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஒருவருக்கொருவர் பழியைப் போட்டுக் கொள்வது வேதனையாக இருப்பதாக சீமான் வருத்தம்
கரூர் பலி! விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சி - சீமான்
Published on
Updated on
1 min read

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஒருவருக்கொருவர் பழியைப் போட்டுக் கொள்வது வேதனையாக இருப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெகவுக்கு ஆதரவாக பாஜக பேசுவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு சீமான் கூறுகையில், ``தெருக்களில் கூட்டம் நடத்துவதைவிட, ஓரிடத்தில் கூட்டம் என்று அழைப்பு விடுத்து, பேசிவிட்டு கிளம்பி விடலாம். தெருக்களுக்குள் செல்வதால், எப்போதும் நெரிசலைத்தான் உண்டாக்கும். ஆனால், எல்லோரும் அதனைத்தான் செய்கின்றனர். இந்த மாதிரியான பரப்புரையை நிறுத்திக் கொள்ளுதல் அல்லது மாற்றிக் கொள்ளுதல் நல்லது.

இல்லையெனில், மேலை நாடுகள் மாதிரி செய்யலாம். ஒவ்வொரு தலைவருக்கும் அரை மணிநேரம் அல்லது ஒரு மணிநேரம் பேசுவதற்கு ஒதுக்கலாம். இந்த இடத்தில் இவர் பேசவிருக்கிறார் என்று அறிவித்தால், யார் பேசுவது ஏற்புடையதோ அவர்களுக்கு வாக்கு செலுத்துவர்.

ஆனால், இதில் நேர விரயம், பண விரயம், பொதுமக்களுக்கும் தொந்தரவுதான் ஏற்படுகிறது. ஆகையால், மேலை நாடுகளின் முறையைக் கொண்டு வருவதுதான் நல்லது.

விஜய் வருவதனால்தான் கரூரில் கூட்டம்; அப்படியென்றால், அவர் வருவதுதான் முக்கிய காரணம். அப்படியிருக்கையில், அதற்கு பொறுப்பேற்று வருந்துகிறேன் என்று கூறினாலே முற்றுப் பெற்றுவிடும். அதை விட்டுவிட்டு, பழியை அரசு ஏற்க வேண்டும், காவல்துறை ஏற்க வேண்டும் என்றும், எனக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்று கூறும்போதுதான் சிக்கல் உண்டாகிறது. இருதரப்புக்கும் பொறுப்பு உள்ளது. அதனைத் தவற விட்டதால், பல உயிர்களை இழந்து விட்டோம்.

தகாத ஒரு நிகழ்வு நிகழ்ந்து விட்டது, இனி வரும் காலங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று இருப்பதுதான் சரி. அதை விட்டுவிட்டு, மாறிமாறி ஒருவருக்கொருவர் பழியைப் போட்டுக்கொண்டு இவர்தான் காரணம், அவர்தான் காரணம் என்று கூறுவதைப் பார்க்கும்போது நமக்குதான் வேதனையாக இருக்கிறது. இது உயிரிழப்புகளைவிட கொடுமையாக இருக்கிறது.

அவரை எப்படியேனும் கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக முயற்சிக்கிறது; அதனால் பேசி வருகின்றனர்’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: அவசியம் என்றால் விஜய்யை கைது செய்வோம்: துரைமுருகன்

Summary

BJP trying to bring TVK Vijay into alliance says NTK Seeman

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com