
நேரடி நெல் கொள்முதலில் மீண்டும் மீண்டும் நாடகமாடும் ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு கண்ணீர் தீபாவளி என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்குவதில் சிக்கல், உரத் தட்டுப்பாடு, காலநிலை மாற்றத்தால் காலம் தவறிப் பெய்யும் மழை என்று பல்வேறு சவால்களைக் கடந்து விவசாயிகள் நெல்மணிகளை உற்பத்தி செய்கிறார்கள்.
ஆனால், அந்த நெல்மணிகளை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாத அரசாக திமுக அரசு திகழ்கிறது. முந்தைய தி.மு.க. ஆட்சியில் நாள் ஒன்றுக்கு 800 மூட்டையாக இருந்த நெல் கொள்முதல், அஇஅதிமுக ஆட்சியில் 1000 மூட்டையாக அதிகரித்தும்; 17 சதவீதம் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி, மத்திய அரசிடமிருந்து ஆணை பெற்றும் நெல்மணிகளை கொள்முதல் செய்தோம்.
ஆனால், ஸ்டாலின் ஆட்சியில் நாளொன்றுக்கு 600 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாகவும், நெல்லைப் பிடிக்க போதுமான சாக்குப் பைகள் இல்லை என்றும், நெல்லைப் பாதுகாக்க தார்ப்பாய்கள் இல்லை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டுவதோடு, ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும் என்றும், நெல் கொள்முதலை 1000 மூட்டைகளாக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதனால், கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை நெல்மணிகளை கொட்டிவைத்து விடியலுக்காக காத்திருக்கிறார்கள் விவசாயிகள். நெல் மூட்டைகளை மழையிலிருந்து பாதுகாப்பதற்குத் தேவையான தார்ப்பாய்களைக்கூட விடியா திமுக அரசு கொடுக்கவில்லை.
சட்டப்பேரவையில் இது தொடர்பாக நான் இரண்டு நாட்களுக்கு முன்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தபோது, அதற்கு பதிலளித்துப் பேசிய உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, "தமிழ் நாட்டில் 25 இடங்களில் திறந்த வெளி சேமிப்புக் கிடங்குகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது, ஒரு நாளைக்கு ஆயிரம் மூட்டை நெல் கொள்முதல் செய்யப்படுகிறது...” என்று சமாளிக்கிறாரே தவிர, முழுமையாக நெல்மணிகள் கொள்முதல் செய்வதற்கும், உரிய முறையில் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை.
நெல் விளைச்சல் இந்த ஆண்டு அதிகம் எனக் கூறும் அமைச்சர், அதற்கு ஏற்ப முன்கூட்டியே கொள்முதல் தொடங்கியிருக்க வேண்டாமா.. ? தேவையான அளவு கிடங்குகளை தயார் செய்திருக்க வேண்டாமா? குறைந்தபட்சம் மழையில் நனையாமல் பாதுகாப்பதற்கு தார்ப்பாய் போன்ற அடிப்படை வசதிகளையாவது செய்து கொடுத்திருக்க வேண்டாமா?
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டுவரை மட்டும் 1,968 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) தெரிவிக்கிறது.
எனவே, அதிக எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறப்பதோடு, அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் செய்ததைப் போன்று தினமும் ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் 1000 மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும்.
22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை மழையில் இருந்து பாதுகாக்கத் தேவையான தார்ப்பாய்களை வழங்கிட வேண்டும்.
விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்ட நெல்மணிகளை திமுக அரசு கொள்முதல் செய்யாததால் விவசாயிகளிடத்தில் மிகப் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு, மாபெரும் போராட்டத்தை இந்த அரசு சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று எச்சரிக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | எடப்பாடி பழனிசாமி பின்னால் மக்கள் சக்தியுள்ளது: ஆர்.பி.உதயகுமார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.