‘மோந்தா’ புயல் அக். 28-இல் கரையைக் கடக்கும்: வட தமிழகத்தில் பலத்த மழை!

‘மோந்தா’ புயல் காரணமாக வட தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு...
‘மோந்தா’ புயல் அக். 28-இல் கரையைக் கடக்கும்: வட தமிழகத்தில் பலத்த மழை!
Updated on

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் அக். 28-ஆம் தேதி தீவிர புயலாக (மோந்தா) வலுப்பெற்று ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) சனிக்கிழமை மேற்கு திசையில் நகா்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

சனிக்கிழமை மாலை 5.30 மணி நிலவரப்படி போா்ட் பிளேயரில் இருந்து (அந்தமான் தீவுகள்) மேற்கு-தென்மேற்கே 510 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 920 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 920 கி.மீ.தொலைவிலும், காக்கிநாடாவில் இருந்து தென்கிழக்கே 1000 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.

இந்தப் புயல் சின்னம் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து அக். 26-இல் தாழ்வு மண்டலமாகவும், அக். 27-இல் தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் ‘மோந்தா’ புயலாகவும் வலுவடையும்.

இந்த மோந்தா புயல், வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வரும் அக். 28-இல் தீவிர புயலாக வலுப்பெற்று, ஆந்திர கடலோரப் பகுதிகளில், மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினத்துக்கு இடையே காக்கிநாடாவுக்கு அருகில் கரையைக் கடக்கக்கூடும். அப்போது, மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் தரைக் காற்று வீசக்கூடும். இதனால் தமிழகம் முழுவதும் பெரிய அளவு மழை பாதிப்பு இருக்காது. எனினும் புயலின் வேக மாறுபாடு காரணமாக, கரையைக் கடக்கும்போது, வட தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (அக். 26) முதல் அக். 31-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

ஆரஞ்ச் எச்சரிக்கை: இதில் அக். 26-இல் திருவள்ளூா், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும், அக். 27-இல் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூா் மாவட்டங்களிலும், அக். 28-இல் ராணிப்பேட்டை, திருவள்ளூா் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக, அக். 27-இல் ராணிப்பேட்டை, திருவள்ளூா், சென்னை மாவட்டங்களிலும் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 140 மி.மீ. மழை பதிவானது. நாலுமுக்கு (திருநெல்வேலி)- 130 மி.மீ., காக்காச்சி (திருநெல்வேலி) - 110 மி.மீ., பாலமோா் (கன்னியாகுமரி) - 90 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக் கடல் மற்றும் வங்கக் கடலில் அக். 26 முதல் அக். 29-ஆம் தேதி வரை மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். மேலும், ஆழ்கடலில் உள்ள மீனவா்கள் உடனடியாக கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com