வங்கக்கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல் வருகிற அக். 28 ஆம் தேதி(செவ்வாய்க்கிழமை) ஆந்திர கடலோரப் பகுதிகளில் தீவிரப் புயலாக கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா அருகே மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினத்திற்கு இடையே அக். 28 ஆம் தேதி மாலை அல்லது இரவில் மோந்தா புயல் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (அக். 25) காலை மேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இன்று காலை 8.30 மணி அளவில் போர்ட் ப்ளேயரிலிருந்து (அந்தமான் தீவுகள்) மேற்கு - தென்மேற்கே 440 கிலோமீட்டர் தொலைவிலும், விசாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 970 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 970 கிலோ மீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கே 990 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அக். 26 ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அக். 27 ஆம் தேதி காலை, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாகவும் வலுவடையும். இந்த புயலுக்கு 'மோந்தா'(Montha) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து அக். 28 ஆம் தேதி தீவிரப்புயலாக வலுப்பெறும். மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடலோரப் பகுதிகளில், மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் தீவிரப்புயலாக அக். 28 ஆம் தேதி மாலை அல்லது இரவு நேரத்தில் கடக்கக்கூடும். அந்த சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடப்பதையொட்டி ஆந்திர கடலோர மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கனமழை எச்சரிக்கை:
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அக். 25 முதல் 28 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மாஹேவில் சில இடங்களில் கனமழையும் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை/இடியுடன் கூடிய மழை பெய்யும்.
அக். 25, 27 மற்றும் 28 தேதிகளில் கர்நாடக கடலோரப் பகுதிகள்
அக். 27 ஆம் தேதிகளில் கர்நாடகத்தின் உள் பகுதிகளில்
அக். 26 - 30 தேதிகளில் ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் யானம்
அக். 26-29 தேதிகளில் ராயலசீமா;
அக். 27 - 29 தேதிகளில் தெலங்கானா
அக். 27 - 29 தேதிகளில் தமிழ்நாடு, கேரளம், மாஹே மற்றும் கர்நாடகத்தின் கடலோரப் பகுதிகளில் மிக கனமழை பெய்யும்.
அக். 27 ஆம் தேதி ஆந்திரத்தின் தெற்கு கடலோரப் பகுதிகள் மற்றும் யானம், ராயலசீமாவில் சில இடங்களில் அதீத கனமழை (21 செ.மீ.க்கும் அதிகமாக) பெய்ய வாய்ப்புள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.