

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை(அக். 27) புயலாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று மாலையே மோந்தா புயலாக உருவாகும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலைக்குள் புயலாக வலுவடையும் என்றும் தீவிரப் புயலாகக் கரையைக் கடக்க வாய்ப்பில்லை என்றும் ஹேமச்சந்திரன் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் ஓங்கோல் முதல் நெல்லூர் வரையிலான பகுதியில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாட்டில், சென்னை, மற்றும் திருவள்ளூரில் பரவலாக கனமழை பெய்யக்கூடும் என்றும், சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் அதே நேரத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, புயல் சின்னமானது போா்ட் பிளேயரில் இருந்து (அந்தமான் தீவுகள்) மேற்கு-தென்மேற்கே 620 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 830 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 780 கி.மீ.தொலைவிலும், காக்கிநாடாவில் இருந்து தென்கிழக்கே 930 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இது புயல் சின்னம் மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த மோந்தா புயல், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் அக். 28-இல் ஆந்திர கடலோரப் பகுதிகளில், மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினத்துக்கு இடையே காக்கிநாடாவுக்கு அருகில் கரையைக் கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.