

சென்னைக்கு கிழக்கே 480 கிமீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளதாகவும் நாளை(அக். 28) இரவுக்குள் புயல் கரையைக் கடக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெற்ற நிலையில் தற்போது சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 480 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
காக்கிநாடாவிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 530 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகபட்டினத்திலிருந்து தெற்கு-தென்கிழக்கே 560 கிலோ மீட்டர் தொலைவிலும், போர்ட் ப்ளேயரிலிருந்து (அந்தமான் தீவுகள்) மேற்கே 890 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. 17 கிமீ வேகத்தில் மோந்தா புயல் நகர்ந்து வருகிறது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (அக்.28) காலை தீவிரப்புயலாக வலுப்பெற்று ஆந்திர கடலோரப் பகுதிகளில் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் மாலை முதல் இரவுக்குள் கரையை கடக்கக் கூடும். அப்போது காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தமிழகத்தில் அக். 1 முதல் இன்று வரை இயல்பைவிட 57% வடகிழக்கு பருவமழை அதிகமாக பதிவாகியுள்ளது. இயல்பாக 144 மி.மீ. மழை பதிவாகும். இந்தாண்டு 227 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இயல்பைவிட கூடுதலாக மழை பதிவாகி உள்ளது.
இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களிலும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் கன முதல் மிக கனமழையும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.