

குறுவைப் பருவத்தில் முன் எப்போதுமில்லாத சாதனையாக டெல்டா மாவட்டங்களில் 60 நாள்களில் 11.78 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு உண்மையை மறைத்து தவறான தகவலைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அந்த ஆண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்பில் அந்த நடப்புக் கொள்முதல் பருவத்தில் மார்ச் 31 வரை நடைபெற்ற கொள்முதல் விவரம் மட்டுமே குறிப்பிடப்படும்.
சட்டமன்றத்தில் கொள்கை விளக்கக் குறிப்பு வைக்கப்பட்ட பின்பு அதாவது ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து அந்த நடப்பு கொள்முதல் பருவம் முடிவடையும் நாளான 31/08 வரை கொள்முதல் நடைபெறும். அதற்கான புள்ளி விவரம் அந்தக் கொள்முதல் குறிப்பில் இடம்பெறாது.
இந்த சாதாரண விஷயத்தைக்கூட புரிந்து கொள்ளாமல் முதலமைச்சர் பொய் சொல்கிறார் என்று எதிர்கட்சித் தலைவராக இருப்பவர் தனக்கு யாரோ ஒருவரால் கொடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தைக்கூட சரிபார்க்காமல் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசி வருகிறார்.
 2021 – 2022 ஆம் ஆண்டு (07.05.2021 முதல் 30.09.2021 வரை) 1438900 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 575306 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை ரூபாய் 2799.05 கோடி.
 2021 – 2022 ஆம் ஆண்டு 3182 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 4327616 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 827249 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை ரூபாய் 8851.15 கோடி.
 2022 – 2023 ஆம் ஆண்டு 4019 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 4422328 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 522015 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை ரூபாய் 9496.80 கோடி.
 2023 – 2024 ஆம் ஆண்டு 3209 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 3495990 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 393887 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை ரூபாய் 8026.04 கோடி.
 2024 – 2025 ஆம் ஆண்டு 3774 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 4799185 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 514470 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை ரூபாய் 11697.55 கோடி.
 2025 – 2026 ஆம் ஆண்டு (01.09.2025 முதல் 30.10.2025 வரை) 1892 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 159084 விவசாயிகளிடமிருந்து 1177708 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை ரூபாய் 2840.25 கோடி. ஆக மொத்தம் கழக ஆட்சிக் காலத்தில் 1.96 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட புள்ளிவிவரத்தையும் அவர் கொடுக்கப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்புகளையும் நன்றாக பார்த்து இனிமேலாவது இதுபோன்று உண்மைக்குப் புறம்பாக சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இதேபோன்று மற்றொரு தவறான தகவலை ஏற்கனவே சொல்லி இருக்கிறார். அதாவது செறிவூட்டப்பட்ட அரிசி தொடர்பாக ஒன்றிய அரசு ஆகஸ்ட் 18 அன்று அனுமதி வழங்கியதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருந்தார். அதேபோன்று அவருடன் உணவு அமைச்சராக இருந்தவரும் அதே பல்லவியைப் பாடினார். அன்புமணி ராமதாஸும் அதையே சொன்னார். ஆனால் நேற்று (30.10.2025) நான் ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோகத்திட்டம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அவர்களை நேரில் சந்தித்து 2025 – 26 ஆம் ஆண்டிற்கான செறிவூட்டப்பட்ட அரிசிக்கான சோதனைத் தரச் சான்றினை விரைந்து வழங்கிட வேண்டுகோள் வைத்துள்ளேன்.
அன்புமணி ராமதாஸ் வடமாவட்டங்களில் நெல் கொள்முதல் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக எதையும் அறிந்துகொள்ளாமலேயே அறிக்கை விட்டுள்ளார்.
மேலும், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 33 நாட்களாக நெல் கொள்முதல் நடைபெறவில்லை என்று தெரிவித்திருப்பதும் அப்பட்டமான பொய். கடந்த 33 நாட்களில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20017 மெட்ரிக் டன் நெல்லும் திருவள்ளூர் மாவட்டத்தில் 34314 மெட்ரிக் டன் நெல்லும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
2025 – 2026 இல் நாளது தேதிவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் 20852 மெட்ரிக் டன்னும் வேலூரில் 1017 மெட்ரிக் டன்னும் விழுப்புரத்தில் 503 மெட்ரிக் டன்னும் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
நடப்புக் கொள்முதல் பருவம் 2025-2026 இல் 30.10.2025 வரை 1892 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 11.78 இலட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லிற்கான தொகை ரூபாய் 2840.25 கோடி 1,52,906 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 76 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 52,458 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 81 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 63,779 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே நாள் வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 44 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 18,249 மெ.டன் நெல் கொள்முதலும் திருவள்ளூர் மாவட்டத்தில் 56 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 23,089 மெ.டன் நெல் கொள்முதலும் செய்யப்பட்டது.
கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு 2.5 மடங்கு அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமல்லாமல், கடந்த ஆறு நாட்களாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளொன்றுக்குச் சராசரியாக 81 மெ.டன் நெல்லும் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளொன்றுக்குச் சராசரியாக 701 மெ.டன் நெல்லும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து 389 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் தினசரி 1000 மூட்டைகள் வரையில் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும், 13 மாவட்டங்களில் 127 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேவைப்படும் இடங்களில் கூடுதல் மெஷின் (Point of Procurement) பயன்படுத்தி கூடுதலாக 1000 நெல் மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கூடுதலாக 28 மெஷின்கள் (Point of Procurement) வழங்கப்பட்டு கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், விவசாயிகளின் நலன் கருதி கொள்முதல் நேரம் மாலை 6.00 மணியிலிருந்து 8.00 மணியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழ்நாடு முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
நெல் கொள்முதல் ஈரப்பத அளவினை அதிகரிக்க (17% இருந்து 22% க்கு) ஒன்றிய அரசுக்கு 19.10.2025 அன்று முன்மொழிவு அனுப்பப்பட்டு ஒன்றிய அரசால் நிபுணர்கள் அடங்கிய மூன்று குழுக்கள் தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டு நெல் ஈரப்பதத்தினை ஆய்வு செய்து நெல் மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளார்கள். நேற்று 30.10.2025 ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோகத்திட்டம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை நேரில் சந்தித்து ஈரப்பதத்தை 17% இலிருந்து 22% ஆக அதிகரித்து கொள்முதல் செய்திட விரைந்து அனுமதி வழங்கக் கோரப்பட்டது. இந்நிலையில் மோந்தா புயலின் காரணமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில் மழை பெய்ததன் காரணமாக கொள்முதல் பணிகளில் இடையூறு ஏற்பட்டது. தற்போது புயல் கரையைக் கடந்து இயல்பு நிலை திரும்பிய நிலையில் கொள்முதல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
ஒரு கொள்முதல் நிலையத்தில் அதிகபட்சம் 800 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையை மாற்றி ஒரு கொள்முதல் நிலையத்திற்கு ஒரு இயந்திரத்திற்கு ஆயிரம் மூட்டை வரை கொள்முதல் செய்யலாம் என்று ஆணை பிறப்பித்துச் சில கொள்முதல் நிலையங்களில் இரண்டு இயந்திரங்கள் வைத்து இரண்டாயிரம் மூட்டைகள் வரையிலும் ஒரு சில இடங்களில் மூன்று இயந்திரங்கள் வைத்து மூவாயிரம் மூட்டைகள் வரையிலும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பதைக் கூட அறியாமல் கொச்சைப்படுத்திப் பேசிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இந்த உண்மைகளை எல்லாம் புரிந்து கொள்ளாமல் எதிர்க்கட்சித் தலைவரும் அன்புமணி ராமதாஸ் போன்றவர்களும் தேவையற்ற வகையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தாமல் இருக்க கேட்டுக் கொள்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.