
பேருந்து அல்லது ரயிலில் ஏறும்போது, கூட்ட நெரிசலில், ஒரு சில வினாடிகளில் செல்போன் திருடப்படும். திருட்டுப் போனது பற்றி பொருளை பறிகொடுத்தவருக்கே தெரியாது. திருடியவரைப் பிடித்தாலும் அவரிடம் எதுவும் இருக்காது. இதுதான் நவோனியா கும்பலின் உத்தி.
சென்னையில் நுழைந்திருக்கும் இந்த நவோனியா திருட்டுக் கும்பலைச் சேர்ந்தவர்கள், சென்னை காவல்துறை, ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே காவல்துறையினர் இணைந்து கண்காணித்து வருகிறார்கள். மக்களுக்கும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
கூட்டமாக இருக்கும் ரயில் நிலையம், பேருந்து நிலையம், சந்தைப் பகுதிகளுக்கு வருபவர்கள் கவனமாக இருக்குமாறும் காவல்துறை எச்சரித்துள்ளது.
இவர்கள் அதிக பயிற்சி எடுத்து, கூட்டமான இடங்களில் திருடுவதில் கைதேர்ந்தவர்கள் என்றும், பொருள்கள் திருடும்போது அதனை கைக்குட்டை போன்றவற்றை வைத்து மறைப்பதையும் வழக்கமாகக் கொண்டவர்கள் என்று காவல்துறை கூறுகிறது.
மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த இவர்கள், ஒரு சிறு குழுவாக ஓரிடத்துக்கு வந்து தனித்தனியாகப் பிரிந்துகொள்வார்கள்.
பிறகு, யாரிடமிருந்து திருடப்போகிறோம் என்று முடிவெடுத்து,விட்டு, ஒருவர் அவரை திசைதிருப்புவார், மற்றொருவர் அவர் அருகில் சென்று கைகுட்டையை வைத்து திருடும்போது யாரும் பார்க்காத வகையில் வைத்துக்கொண்டு செல்போனை திருடுவார். செல்போனை திருடியதும் அருகில் இருக்கும் மற்றொருவருக்கு அதைக் கொடுத்துவிடுவார். செல்போனை வாங்கியவர் அங்கிருந்து சில வினாடிகளில் மறைந்துவிடுவார். சில வேளைகளில் சிறார்கள் கூட இதில் ஈடுபடுவார்கள்.
மூன்று அல்லது நான்கு பேர்களாக வருவார்கள். யாராவது செல்போனை திருடிவிட்டதாகக் கூச்சல் போட்டால், அவர்களில் சிலரே, திருடரைத் துரத்துவது போல அங்கிருந்து ஓடுவார்கள். யாரும் திரும்பி வர மாட்டார்கள். போனது போனதுதான்.
இவர்கள் பற்றி காவல்துறை கூறும்போது, ஒரு வாரம்தான் அதிகபட்சம் இவர்கள் ஒரு நகரில் இருப்பார்கள். முடிந்த அளவுக்கு திருடிவிட்டு மற்றொரு நகருக்குச் சென்றுவிடுவார்கள். ஒரு நகரிலிருந்து புறப்பட்டுவிட்டால், அவர்கள் கொள்ளையடித்ததை மீட்பதோ, அவர்களை அடையாளம் காண்பதோ இயலாது.
சென்னை, தில்லி, விஜயவாடா, பெங்களூரு போன்ற பெரு நகரங்களே இலக்கு. எனவே, இதுபோன்ற திருடர்களிடமிருந்து மக்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், கூட்டமான பகுதிகளுக்கு வரும்போது விழிப்புணர்வுடன் இருங்கள். ஆண்கள் பாக்கெட்டில் செல்போன் வைக்க வேண்டாம்.
இந்த கூட்டத்தைச் சேர்ந்தவர்களின் புகைப்படங்கள் மக்கள் கூடும் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படையினர் கூறுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.