
பெரம்பலூருக்கு சனிக்கிழமை நள்ளிரவு வந்த தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் பிரசாரம் செய்யாமல் சென்றதால் தொண்டா்களும், பொதுமக்களும் ஏமாற்றமடைந்தனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் சனிக்கிழமை காலை திருச்சியிலும், அதைத் தொடா்ந்து மாலை 3.30 மணி அளவில் அரியலூரிலும், பின்னர் 4.30 மணி அளவில் குன்னம் பேருந்து நிலையம் பகுதியிலும் பிரசாரம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களும், பொதுமக்களும் விஜய்யைப் பார்க்க வேண்டும் எனும் ஆவலில் சனிக்கிழமை மதியம் 2 மணி முதல் குன்னம் பேருந்து நிலையம் பகுதியில் குவிய தொடங்கினர்.
சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் சுமாா் 7 மணி நேரத்துக்கும் மேலாக விஜய்யின் வருகைக்காக காத்திருந்தனர்.
இந்த நிலையில், இரவு 9.52 மணியளவில் குன்னம் பேருந்து நிலையம் பகுதிக்கு வந்த விஜய், அவரது பிரசார வாகனத்தின் மேல் ஏறி நின்று கட்சி தொண்டர்களையும், பொது மக்களையும் பாா்த்து சில நிமிடங்கள் கையை அசைத்து விட்டு, பின்னர் மீண்டும் 9.54 மணி அளவில் பேருந்துக்குள் சென்று அமர்ந்து கொண்டார்.
பின்னர், பேருந்து உட்புறத்தில் எரிந்துகொண்டிருந்த மின் விளக்குகளும் அணைக்கப்பட்டு பிரசார வாகனத்தின் அனைத்து ஜன்னல்களும் வாகனத்தில் உள்ளிருப்பவர்கள் வெளியே தெரியாதவாறு மூடப்பட்டு பிரசார வாகனம் குன்னத்திலிருந்து பெரம்பலூர் நோக்கிச் சென்றது.
குன்னத்திலிருந்து பெரம்பலூா் நான்கு சாலை வரும் வழியில் உள்ள ஒதியம் பிரிவு சாலை, சித்தளி, பேரளி, கவுல்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்கள் விஜய்யை பாய்ப்பதற்காக ஆவலுடனும், உற்சாகத்துடனும் காத்திருந்தனர்.
ஆனால், எந்தக் கிராமத்திலும் அவர் வந்த பிரசார வாகனம் நிற்காமல் பெரம்பலூர் நான்குச்சாலை பகுதியை அடைந்தது. அப்பகுதியிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடியிருந்த நிலையில், விஜய்யின் பிரசார வாகனம் நிற்காமல் பழைய பேருந்து நிலையம் நோக்கி மெதுவாக ஊர்ந்து சென்றது.
சுமார் நள்ளிரவு 12.30 மணி அளவில் பெரம்பலூர் பாலக்கரையை அவரது பிரசார வாகனம் சென்றடைந்தது. அங்கிருந்து வாகனத்தை திருப்பிக் கொண்டு சென்னை நோக்கி விஜய் புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால், விஜய் பிரசாரம் மேற்கொள்வதற்காக பழைய பேருந்து நிலையம் பகுதிக்கு வருவார் என சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி தொண்டா்களும், பொதுமக்களும் காத்திருந்த நிலையில், அவர் அந்த பகுதிக்கு வராமல் சென்று விட்டார் எனும் தகவலை கட்சி நிா்வாகிகள் பொதுமக்களுக்கு தெரிவிக்காததால், அதிகாலை 1 மணி வரையில் தொண்டர்கள் காத்துக் கிடந்தனர்.
இதனால், பல மணி நேரமாக உணவுகூட உண்ணாமல் விஜய்யைக் காண காத்துக்கிடந்த தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் ஏமாற்றமும் அதிருப்தியும் அடைந்தனர்.
அவரது பிரசாரப் பயணத்தில் போதிய திட்டமிடல் இல்லாததே இதுபோன்ற குழப்பங்களுக்கு காரணம் எனக் கூறப்பட்டாலும், கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் திடீரென கூடியதும் பிரசாரப் பயணத்தில் ஏற்பட்ட காலத்தாமதத்துக்கு காரணமாகக் கருதப்படுகிறது.
இதையும் படிக்க... நானும் சேர்ந்துதான் திமுகவை தேர்ந்தெடுத்தேன்; ஆனால்..! -அரியலூரில் விஜய்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.